தஞ்சாவூரில் துணிகரம் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி வீட்டில் 87 பவுன் நகை கொள்ளை
வல்லம்: தஞ்சாவூரில் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் வீட்டில் 87 பவுன் நகை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே சேகரன் நகரில் வசித்து வருபவர் ஏ.கே.எஸ். விஜயன். திமுக முன்னாள் எம்பியான இவர் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகவும், திமுக விவசாய அணி மாநில செயலாளரகவும் உள்ளார். இவர், குடும்பத்தினருடன் கடந்த 28ம்தேதி நாகப்பட்டினம் சென்றிருந்தார். அங்கிருந்து நேற்று காலை 8 மணி அளவில் தஞ்சாவூர் திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த இரும்பு பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவில் இருந்த 87 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தது. தகவல் அறிந்து தஞ்சாவூர் எஸ்பி ராஜாராம் தலைமையிலான தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கடந்த 2 நாட்களாக வீடு பூட்டப்பட்டு இருந்ததை நோட்டமிட்ட மர்மநபர்கள் புகுந்து கொள்ளையடித்தது தெரிய வந்தது. மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து கொள்ளையரை தேடி வருகின்றனர்.