லூவர் அருங்காட்சியகத்தில் ரூ.830 கோடி நகைகள் அபேஸ்; இந்தியாவின் ‘ரீஜென்ட்’ வைரத்தை கொள்ளையர்கள் விட்டுச்சென்றது ஏன்?.. விடாது துரத்தும் சாபத்தால் பரபரப்பு
பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியகத்தில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள இந்தியாவின் ‘ரீஜென்ட்’ வைரத்தை மட்டும் திருடர்கள் தொடாமல் சென்றது அதன் மீதான சாப நம்பிக்கையை உறுதி செய்துள்ளது. பிரான்ஸ் தலைநகரின் பாரிஸ் லூவர் அருங்காட்சியகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பட்டப்பகலில் புகுந்த நான்கு பேர் கொண்ட கொள்ளைக் கும்பல், வெறும் ஏழு நிமிடங்களில் 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான (இந்திய மதிப்பில் சுமார் 830 கோடி ரூபாய்) மதிப்புள்ள எட்டு அரச நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது. ஆனால், அங்கிருந்த விலை மதிப்புமிக்க 140.6 காரட் எடை கொண்ட ரீஜென்ட் வைரம் மற்றும் 21.32 காரட் எடை கொண்ட ஹார்டென்சியா இளஞ்சிவப்பு வைரம் ஆகியவற்றை அந்த கும்பல் கண்டுகொள்ளாமல் விட்டுச் சென்றது.
அருங்காட்சியகத்தின் விலை மதிக்க முடியாத பொக்கிஷங்களில் ஒன்றான ரீஜென்ட் வைரத்தை திருடர்கள் ஏன் புறக்கணித்தார்கள் என்பது குறித்து போலீசார் குழப்பமடைந்துள்ளனர். வைரத்துடன் இணைந்திருக்கும் சாபத்தின் வரலாறு காரணமாகவே திருடர்கள் அதைத் தவிர்க்க முடிவெடுத்திருக்கலாம் என்று பரவலாகப் பேசப்படுகிறது. இந்தியாவின் கோல்கொண்டா அடுத்த கொல்லூர் சுரங்கத்தில் 1698ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட இந்த ரீஜென்ட் வைரம், பிரம்மாண்டமான ரத்தினமாகும். இந்த வைரத்தின் ரத்தக்கறை படிந்த வரலாறு, அது சுரங்கத்தில் இருந்து திருடப்பட்டதிலிருந்தே தொடங்குகிறது. அதைத் திருடிய ஒருவர், ஆங்கிலேய கப்பல் தலைவனால் கொலை செய்யப்பட்டு, அவரிடமிருந்து வைரம் கைமாறியது. அதன்பிறகு பிரான்ஸ் ஆட்சியாளர்கள் பலரின் கைக்குச் சென்ற இந்த வைரம், அவர்கள் பலரும் பெரும் துரதிர்ஷ்டங்களை சந்தித்ததால் ‘சாபம் நிறைந்த வைரம்’ என்ற பெயரைப் பெற்றது.
இந்த வைரத்தை வைத்திருந்த மன்னர் பதினாறாம் லூயி மற்றும் அவரது மனைவி மேரி அன்டோனெட் இருவரும் பிரெஞ்சுப் புரட்சியின் போது தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். நெப்போலியன் போனபார்ட் தனது வாளின் கைப்பிடியில் இந்த வைரத்தைப் பதித்திருந்தார். அவரும் பிற்காலத்தில் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டு 1821ல் மர்மமான முறையில் இறந்தார். இத்தகைய கொடூரமான கடந்த காலத்தைக் கொண்டிருந்தாலும், ரீஜென்ட் வைரம் உலகின் மிகவும் பிரபலமான மற்றும் மதிப்புமிக்க ரத்தினங்களில் ஒன்றாக விளங்குகிறது. பிரான்ஸ் அரசின் முக்கிய அங்கமாக விளங்கும் ரீஜென்ட் வைரம், லூவர் அருங்காட்சியகத்தின் முக்கிய சொத்துகளில் ஒன்றாகும்.