‘’பங்களா எடுத்து உல்லாசமாக இருந்து நகை, பணம் பறித்தேன்’’ மேட்ரிமோனி மூலம் பெண்களை சீரழித்த காமக்கொடூர வாலிபர் பகீர் வாக்குமூலம்
அண்ணாநகர்: ‘’பல பெண்களிடம் உல்லாசமாக இருந்து நகை, பணம் பறித்து ஜாலியாக வாழ்ந்துவந்தேன்’’ என்று மேட்ரிமோனி மூலம் பல பெண்களை வலையில் வீழ்த்திய காமக் கொடூர வாலிபர் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேட்ரிமோனி மூலம் 50க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சூர்யா (28) என்பவரை திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கு முன் போலீசார் கைது செய்தனர். இதன்பின்னர் அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து பெண் வன்கொடுமை மற்றும் குண்டாஸ் உட்பட 7 வழக்குகள் பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், சூர்யாவை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுவில், ‘’ சிறையில் உள்ள சூர்யா என்பவர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து பல லட்சம் ஏமாற்றி உள்ளார். பெண்களிடம் ஏமாற்றிய நகைகள், பல லட்சத்தை எங்கு பதுக்கி வைத்துள்ளார் என்று விசாரணை செய்யவேண்டும்’ என்று தெரிவித்திருந்தனர். இதையடுத்து நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து நேற்றுமுன்தினம் புழல் சிறையில் இருந்து சூர்யாவை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது சூர்யா கூறியதாவது;
மேட்ரிமோனி மூலம் அறிமுகமான பெண்களை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி தனியார் விடுதிக்கு அழைத்துச்சென்று உல்லாசமாக இருந்தேன். வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்கள், சென்னை புறநகர் பகுதிகளில் பல பெண்களை ஏமாற்றி நகைகளை பறித்துகொண்டு இடம் வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்தேன். மேலும் பெண்களிடம் உல்லாசமாக இருப்பதற்கு சொகுசு பங்களாவை வாடகைக்கு எடுத்து வைத்திருந்தேன். மசாஜ் சென்டருக்கு சென்று ஆடம்பரமாக பணம் செலவு செய்தேன். நண்பர்களுடன் சேர்ந்து தினமும் மது அருந்தி ஊர் சுற்றி வந்தேன். இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.