கன்னியாகுமரியில் ஜேசிபி வாகனம் மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
கன்னியாகுமரி: குமரி சுற்றுலா தலத்தில் நெருக்கடி சாலையாக கருதப்படுவது சர்ச் சாலை ரயில்வே ஸ்டேஷன் சாலை மற்றும் ரவுண்டனா. இப்பகுதியில் எப்போழுதும் அதிகமாக கூட்டம் இருந்து கொண்டு இருக்கும். இந்நிலையில் ரயில்வே ஸ்டேஷன் சாலைகளில் இருந்து சர்ச் ரோடு வழியாக ரவுண்டனா செல்லும் சாலையில் இருந்து ஒரு ஜேசிபி வாகனம் தறிகெட்ட நிலையில் நிலைதடுமாறி அதிவேகத்தில் வந்து கொண்டிருந்தது.
இந்த ஜேசிபி வாகனம் சாலையோரம் உள்ள நடந்து சென்ற பாதசாரிகள் மீது கண்மூடி தனமாக மோதியது. இந்த மோதலில் சாலையில் சென்றவர்கள் பலர் படுகாயம் அடைந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள தனியார் கேட்டரிங் சென்டரில் பயின்று வரும் சபரி என்கிற நபரும் அதேபோல் தவெக நிர்வாகி முகமத் என்கிற நபரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.
மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடனடியாக விசாரணை செய்ததில் ஜேசிபி வாகனத்தை ஓட்டிய நபர் மதுபோதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் கன்னியாகுமரி சுற்றுலா தலத்தில் மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.