ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக ஆட்சியை காப்பாற்றிய பாஜவுக்கு நன்றியோடு உள்ளோம்: எடப்பாடி பழனிசாமி பேச்சு
சென்னை: சென்னை வடபழனியில் அதிமுக சார்பில் அண்ணாவின் 117வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: மழை காரணமாக தான், தர்மபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயண திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. உடனே எடப்பாடி பழனிசாமி அதிமுக உட்கட்சி பிரச்னை குறித்து உள்துறை அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்த டெல்லி செல்கிறார் என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதிமுகவை எவராலும் ஒன்னும் பண்ண முடியாது.
ஆட்சி அதிகாரத்தை விட தன்மானம்தான் முக்கியம். இம்மி அளவு கூட விட்டுக்கொடுக்க மாட்டேன். சிலபேரை கைக்கூலியாக வைத்து ஆட்டம் போடுகிறார்கள். அந்த கைக்கூலிகள் யார் என அடையாளம் கண்டுவிட்டோம், அவர்களுக்கு விரைவில் முடிவு கட்டப்படும். சிலபேர் அதிமுக ஆட்சியை கவிழ்க்க பார்த்தார்கள், அவர்களை மன்னித்து துணை முதல்வர் பதவி கொடுத்தோம், ஆனாலும் திருந்தவில்லை. மீண்டும் அதிமுக அலுவலகத்தை அடிச்சு நொறுக்கினார்கள். இன்னொருவர் சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை கடத்திக் கொண்டு போனார்கள். இவர்களை எல்லாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
எனக்கு உறுதியான எண்ணம், மனநிலை உண்டு, எதற்கும் அஞ்ச மாட்டேன், என்னை யாரும் மிரட்ட முடியாது. மத்தியில் இருந்து யாரும் என்னை அச்சுறுத்தவில்லை, நமக்கு நல்லது தான் செய்தார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியை கபளீகரம் செய்ய பார்த்தார்கள். ஆட்சியை கவிழ்க்க பார்த்தார்கள். அவர்களிடம் இருந்து கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றி கொடுத்தவர்கள் மத்தியில் இருந்தவர்கள் தான். அந்த நன்றியோடு நாங்கள் இருக்கிறோம்.
கட்சிக்கு உழைப்பவர்களை தான் அனுசரித்து செல்ல முடியும். வெட்டி பேச்சு பேசுபவர்களை அனுசரித்து செல்ல முடியாது. சில பேர் அதிமுகவை அடமானம் வைக்க பார்க்கிறார்கள். அதிலிருந்து காப்பாற்ற அனைவரும் துணிந்து நிற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.