ஜெயலலிதா தொகுதிக்கு குறி வைக்கும் பாஜ: திருச்சி அதிமுக டென்ஷன்
திருச்சி: ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் இம்முறை பாஜ களமிறங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ளன. தேர்தலை சந்திக்க கட்சிகள் தயாராகி வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் அதிமுக- பாஜ இடையே கூட்டணி உருவானது. இக்கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்க்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த மக்களவை தேர்தலில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் பாஜவுக்கு 50 தொகுதிகள் கேட்க அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோவை தெற்கு, நீலகிரி, நெல்லை, மொடக்குறிச்சி, நாகர்கோவில், குளச்சல், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, காரைக்குடி, மயிலாப்பூர், துறைமுகம், திருவண்ணாமலை, மதுரை வடக்கு, தாராபுரம், அரவக்குறிச்சி, தளி, விருதுநகர், திட்டக்குடி, தாராபுரம் உள்ளிட்ட 50 தொகுதிகள் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளதாம்.
குறிப்பாக திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியையும் பாஜ குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொகுதி 2011ல் ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற தொகுதியாகும். 1998, 1999 மக்களவை தேர்தல்களில் திருச்சி தொகுதியில் பாஜ வெற்றி பெற்றது. எனவே திருச்சி மக்களவை தொகுதிக்குட்பட்ட ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டால் எளிதில் வெற்றி பெறலாம் என பாஜ கருதுகிறதாம்.
மேலும் ஸ்ரீரங்கம் கோயில்கள் நிறைந்த தொகுதி என்பதும் ஒரு காரணமாகும். ஆனால் ஸ்ரீரங்கத்தை விட்டு தர அதிமுகவுக்கு விருப்பமில்லை. இதுபற்றி திருச்சி அதிமுக வட்டாரத்தில் விசாரித்த போது, ‘ஸ்ரீரங்கம் ஜெயலலிதா வென்று முதல்வரான தொகுதி. கிராமங்கள் அதிகம் உள்ள தொகுதி. இங்கு அதிமுகவுக்கு செல்வாக்கு அதிகம். இந்த தொகுதியை பாஜ அல்ல, வேறு எந்த கூட்டணி கட்சிகளுக்கும் தலைமை விட்டு தராது. இங்கு அதிமுகவே நேரடியாக போட்டியிடும்’ என்றனர்.