மும்மொழி திட்டத்தை ஏற்றால் தான் பள்ளிகளுக்கான கல்வி நிதியை தர முடியும் என்பதா? ஒன்றிய கல்வி அமைச்சருக்கு ஜவாஹிருல்லா கண்டனம்
சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கை:ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மும்மொழி திட்டத்தை ஏற்றால் மட்டுமே பள்ளிகளுக்கான கல்வி நிதியைத் தர முடியும்என்று பேசியிருக்கிறார். எதேச்சதிகாரப் போக்குடன் ஒன்றிய அரசு செயல்படுவது மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் செயலாகும். தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய 2400 கோடி ரூபாய் கல்வி நிதியைத் தராமல் வஞ்சிப்பது தமிழ்நாடு மாணவர்கள் மீதான ஒன்றிய அரசின் அக்கறையின்மையைத் அம்பலப்படுத்துகிறது.
பிற மாநிலங்களில் சிபிஎஸ்சி கல்வித் திட்டத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் தமிழ் புறக்கணிக்கப்பட்டே வருகிறது. மாநில மொழிகளின் செழுமையை வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கில் தொடர்ந்து செயல்படும் ஒன்றிய அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.