பழநி கோயிலில் ஜப்பான் நாட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு: தமிழர் பாரம்பரிய உடையணிந்து அசத்தல்
பழநி: பழநி கோயிலுக்கு வந்த ஜப்பான் நாட்டு பக்தர்கள், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை மற்றும் சேலை அணிந்து பால்குடம் எடுத்து வழிபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, லண்டன் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், ஜப்பான் நாட்டை சேர்ந்த 65 பேர் கொண்ட பக்தர்கள் குழுவினர் தமிழகத்தில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். முக்கிய கோயில்களுக்கு சென்று வழிபட்டு வரும் இக்குழுவினர், நேற்று மாலை பழநி வந்தனர். இங்குள்ள புலிப்பாணி ஆசிரமத்தில் நேற்றிரவு தங்கினர்.
இன்று காலை தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை மற்றும் சேலை அணிந்து புலிப்பாணி ஆசிரமத்திலிருந்து அடிவாரத்திலுள்ள திருஆவினன்குடி கோயிலுக்கு பால் குடம் எடுத்து வந்தனர். அங்கு சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து புலிப்பாணி ஆசிரமத்தில் உலக நன்மை வேண்டி நடந்த சிற்பபு யாகத்தில் கலந்து கொண்டனர். இதன்பின் மலைக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஜப்பான் பக்தர்களுடன் தமிழக பக்தர்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்து கொண்டனர்.