ஜப்பான் மகளிர் டென்னிஸ்; தெரெஸாவை தெறிக்கவிட்டு லெய்லா சாம்பியன்: ஒரே ஆண்டில் 2வது பட்டம்
ஒசாகா: ஜப்பான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டிகள் ஜப்பானின் ஒசாகா நகரில் நடந்து வந்தன. நேற்று முன்தினம் நடந்த அரை இறுதிப் போட்டியில் ரோமானியா வீராங்கனை சொரானா மைக்கேலா கிறிஸ்டீயை வீழ்த்தி, கனடா வீராங்கனை லெய்லா பெர்னாண்டஸ் (23 வயது, 27வது ரேங்க்) இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் செக் வீராங்கனை தெரெஸா வாலன்டோவா (18), ரோமானியா வீராங்கனை ஜாக்குலின் அடினா கிறிஸ்டியனை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
இந்நிலையில், லெய்லா பெர்னாண்டஸ் - தெரெஸா வாலன்டோவா இடையிலான இறுதிப் போட்டி நேற்று நடந்தது. துவக்கம் முதல் துடிப்புடன் ஆடிய லெய்லாவை சமாளிக்க முடியாமல் வாலன்டோவா திணறினார். அந்த செட்டில் ஒரு புள்ளி கூட விட்டுக் கொடுக்காமல் 6-0 என்ற கணக்கில் லெய்லா அபார வெற்றி பெற்றார். இருப்பினும் 2வது செட்டில் சுதாரித்து ஆடிய வாலன்டோவா, 7-5 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை வசப்படுத்தினார். அதையடுத்து, வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட் விறுவிறுப்பாக நடந்தது.
தனது தவறுகளை திருத்திக் கொண்டு சாதுரியமாக ஆடிய லெய்லா, அந்த செட்டை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். அதையடுத்து, 2-1 என்ற செட் கணக்கில் வென்ற லெய்லா, ஜப்பான் ஓபன் மகளிர் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இந்தாண்டில் லெய்லா வெல்லும் 2வது சாம்பியன் பட்டம் இது. இதற்கு முன், கடந்த ஜூலையில் நடந்த வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் அன்னா காலின்ஸ்கயாவை வீழ்த்தி, லெய்லா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.