ஜப்பான் மகளிர் ஓபன் டென்னிஸ் எழிலாய் வென்ற லெய்லா: இறுதி போட்டிக்கு முன்னேற்றம்
ஒசாகா: ஜப்பான் மகளிர் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் நேற்று, கனடா வீராங்கனை லெய்லா பெர்னாண்டஸ் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஜப்பான் மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டிகள், ஜப்பானின் ஒசாகா நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த அரை இறுதிப் போட்டியில் கனடா வீராங்கனை லெய்லா பெர்னாண்டஸ் (23), ரோமானியா வீராங்கனை சொரானா மைக்கேலா கிறிஸ்டி (35) மோதினர். துவக்கத்தில் ஆக்ரோஷமாக ஆடிய லெய்லா 6-1 என்ற புள்ளிக் கணக்கில் முதல் செட்டை வசப்படுத்தினார்.
தொடர்ந்து நடந்த 2வது செட்டில் கிறிஸ்டி வேகம் காட்டியதால், 6-2 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினார். அதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டில் சுதாரித்து ஆடிய லெய்லா, 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் போட்டியில் வென்ற லெய்லா, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். மற்றொரு அரை இறுதிப் போட்டியில் செக் வீராங்கனை தெரெஸா வாலன்டோவா (18), ரோமானியா வீராங்கனை ஜாக்குலின் அடினா கிறிஸ்டியன் (27) உடன் களம் கண்டார்.
அந்த போட்டியின் முதல் செட்டில் இருவரும் சம பலத்துடன் மோதினர். அதனால் டைபிரேக்கர் வரை நீண்ட அந்த செட்டை, 7-6 (7-3) என்ற புள்ளிக் கணக்கில் ஜாக்குலின் வசப்படுத்தினார். பின்னர் சுதாரித்து ஆடிய வாலன்டோவா, 6-4, 6-3 என்ற புள்ளிக் கணக்கில் அடுத்த இரு செட்களையும் வசப்படுத்தி போட்டியில் வென்றார். அதையடுத்து, இறுதிப் போட்டிக்கு வாலன்டோவா முன்னேறினார். இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் வாலன்டோவா, லெய்லா மோதவுள்ளனர்.