ஜப்பான் ஓபன் டென்னிஸ்: காயத்தால் நவோமி வேதனை வென்று படைத்தார் சாதனை
ஒசாகா: ஜப்பான் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் நேற்று, ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, காலில் காயத்தால் அவதிப்பட்ட போதும், சிறப்பாக ஆடி அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
ஜப்பானின் ஒசாகா நகரில் ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, டென்மார்க்கை சேர்ந்த நடப்பு சாம்பியன் சூசன் லாமென்ஸ் உடன் மோதினார். முதல் செட்டில் இருவரும் கடுமையாக போராடியதால் டை பிரேக்கர் வரை நீண்டது. கடைசியில் அந்த செட்டை, 7-6 (8-6) என்ற புள்ளிக் கணக்கில் நவோமி கைப்பற்றினார்.
இருப்பினும், 2வது செட்டை 3-6 என்ற புள்ளிக் கணக்கில் அவர் இழக்க நேரிட்டது. அதைத் தொடர்ந்து நடந்த 3வது செட்டில் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் நவோமி முன்னிலை வகித்தபோது, அவருக்கு காயம் ஏற்பட்டு அவதிப்பட்டார். அவரது இடது காலில் மருத்துவர் சிகிச்சை அளித்தார். அதன்பின், தொடையில் கட்டுப் போட்ட நிலையில், வலியை பொறுத்துக் கொண்டு அந்த செட்டை அவர் ஆடத் தொடங்கினார். கடைசியில் 6-2 என்ற புள்ளிக் கணக்கில் அதை ஒசாகா வசப்படுத்தினார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய நவோமி, காலிறுதிக்கு முன்னேறினார். நவோமி, சூசன் இடையிலான போட்டி, 2 மணி, 20 நிமிடம் நீடித்தது.