ஜப்பான் ஓபன் டென்னிஸ் நோஸ்கோவாவுக்கு நோ சொன்ன: பென்சிக் சாம்பியன்
டோக்கியோ: ஜப்பான் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் போட்டியில் நேற்று, சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்சிக் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டிகள், டோக்கியோ நகரில் நடந்து வந்தன. நேற்று முன்தினம் நடந்த அரை இறுதிப் போட்டி ஒன்றில் சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்சிக் (28), அமெரிக்க வீராங்கனை சோபியா கெனினை (26) வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் செக் வீராங்கனை லிண்டா நோஸ்கோவா (20), கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபாகினா (26) மோதவிருந்தனர். போட்டி துவங்கும் முன், காயம் காரணமாக எலெனா விலகியதால், நோஸ்கோவா இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இந்நிலையில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் பென்சிக் - நோஸ்கோவா மோதினர்.
போட்டியின் துவக்கம் முதல் ஆக்ரோஷமாக ஆடிய பென்சிக் முதல் செட்டை 6-2 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அவர் 6-3 னெ்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டையும் கைப்பற்றினார். அதனால், 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய பென்சிக் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.