ஜப்பான் மாஸ்டர்ஸ் பேட்மின்டன் மகளிர் இரட்டையர் பிரிவில் மலேசியா இணை சாம்பியன்
டோக்கியோ: ஜப்பான் மாஸ்டர்ஸ் பேட்மின்டன் மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் மலேசியா வீராங்கனைகள் பியர்லி டேன், எம் தின்னா இணை வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஜப்பானில், ஜப்பான் மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வந்தன. நேற்று நடந்த மகளிர் இரட்டையர் இறுதிப் போட்டியில் மலேசியாவின் பியர்லி டேன், எம் தின்னா இணை, ஜப்பான் வீராங்கனைகள் ரின் இவாநகா, கீய் நகாநிஷி இணையுடன் மோதியது. துவக்கம் முதல் இரு இணைகளும் சிறப்பாக ஆடி புள்ளிகளை குவித்தனர்.
முதல் செட் இழுபறியாக காணப்பட்ட நிலையில் கடைசியில் அந்த செட்டை, 22-20 என்ற புள்ளிக் கணக்கில் மலேசியா இணை வசப்படுத்தியது. தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் அதே நிலை காணப்பட்டது. இருப்பினும், அந்த செட்டையும், 21-19 என்ற புள்ளிக் கணக்கில் மலேசியா வீராங்கனைகள் கைப்பற்றினர். அதனால், 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய அவர்கள் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர். இந்த ஆண்டில், இந்த இணை வெல்லும் 3வது பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.