ஜப்பானின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
டோக்கியோ: ஜப்பானின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக, அப்பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் உள்ளூர் நேரப்படி இரவு 11.15 மணிக்கு நாட்டின் வடக்குக் கடற்கரையிலிருந்து சுமார் 44 மைல் (70 கிமீ) தொலைவிலும் சுமார் 33 மைல் ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
இவாட், அமோரி மற்றும் ஹொக்கைடோவின் சில பகுதிகள் உட்பட கடற்கரையின் சில பகுதிகளில் சுனாமி கிட்டத்தட்ட 10 அடி (3 மீட்டர்) உயரத்தை எட்டக்கூடும் என்று ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அமோரியில் ஏற்கனவே 16 அங்குல (40 செ.மீ) உயரத்தில் சுனாமி ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுனாமி எச்சரிக்கையை அடுத்து ஆபத்து நிறைந்த கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான மற்றும் உயரமான இடங்களுக்கு வெளியேற வேண்டும் என வானிலை ஆய்வு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.