ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க சட்டம் கொண்டுவர வேண்டும்: பிரதமருக்கு கார்கே, ராகுல் கடிதம்
இந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, ‘‘கடந்த 5 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்கு தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறார்கள். இந்த கோரிக்கையானது சட்டப்பூர்வமானது. அவர்களின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக உரிமைகளில் உறுதியாக உள்ளது. கடந்த காலங்களில் யூனியன் பிரதேசங்களுக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்ட சம்பவங்கள் இருந்தபோதிலும், ஜம்மு காஷ்மீர் விவகாரம் சுதந்திர இந்தியாவின் முன்னோடியில்லாதது என்பதை அங்கீகரிப்பது முக்கியமாகும்.
ஒரு முழுமையான மாநிலம் அதன் பிரிவினைக்கு பிறகு யூனியன் பிரதேசமாக தரமிறக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து வழங்குவதற்கான சட்டத்தை வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டு வருமாறு அரசை வலியுறுத்துகிறோம். லடாக் யூனியன் பிரதேசத்தை அரசியலமைப்பின் 6வது அட்டவணையின் கீழ் சேர்க்கவும் அரசு சட்டம் இயற்ற வேண்டும்” என்று இருவரும் குறிப்பிட்டுள்ளனர்.