ஜம்முவில் பலத்த மழை தாவி ஆற்றில் வெள்ள அபாயம் பாக்.கிற்கு இந்தியா விடுத்த எச்சரிக்கை
இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இதையடுத்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது உள்ளிட்ட பாகிஸ்தானுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இந்த நிலையில் தாவி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு முதல் முறையாக பாகிஸ்தான் அரசை இந்தியா தொடர்பு கொண்டு இந்த தகவலை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வமாக இரு நாடுகளும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உற்பத்தியாகும் தாவி ஆறு ஜம்மு வழியாக பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள பஞ்சாப்பிற்குள் பாய்கிறது.