ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் விழுந்ததில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 3 பேர் பலி..!!
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் விழுந்ததில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தின் பசந்த்கர் பகுதியில் மலைப்பாங்கான பகுதியில் உள்ள இடத்திற்குச் சென்று கொண்டிருந்த சிஆர்பிஎஃப் வாகனம் சாலையை விட்டு விலகி ஒரு பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை கண்ட உள்ளூர்வாசிகள் தானாக முன்வந்து உதவ முன்வந்துள்ளனர். பின்னர், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த மீட்பு குழுவினர் மீட்பு நடவடிக்கைகளை உடனடியாக தொடங்கினர்.
உதம்பூர் மாவட்ட ஆட்சியர் சலோனி ராய் நிலைமையை நேரில் கண்காணித்து தகவல் தெரிவித்து வருகிறார். இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும் , 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் ஐந்து பேர் படுகாயங்களுடன் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களுக்கு அணைத்து மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார். மேலும், உதம்பூரின் துணை ஆணையர் வேண்டுகோளின் பேரில், படுகாயமடைந்தவர்களை விமானத்தில் ஏற்றிச் செல்ல ராணுவ ஹெலிகாப்டர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.