ஜல்லிக்கட்டு போல சேவல் சண்டைக்கு சட்டதிருத்தம் செய்தால் நடத்த அனுமதிக்கலாம்: ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: ஜல்லிக்கட்டு போல சேவல் சண்டை நடத்த சட்ட திருத்தம் செய்தால் அனுமதி வழங்கலாம் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை மாவட்டம், பேரையூரைச் சேர்ந்த மூவேந்தன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘பேரையூர் அருகே காரைக்கேணி கிராமத்தில் சேவல் சண்டை நடத்த அனுமதி மறுத்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். எனவே, அதை ரத்து செய்து விதிகளுக்கு உட்பட்டு சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:
சேவல் சண்டை நடத்த அனுமதிக்கலாமா என்ற ஒரே கேள்வியைத் தான் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கலாம் என்பதற்காக மனுதாரர் தரப்பு தனக்கு ஆதரவாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளை தாக்கல் செய்துள்ளனர். அதே நேரம் இரு நீதிபதிகள் அமர்வில் சேவல் சண்டை நடத்தக் கூடாது என உத்தரவாகியுள்ளது. விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் சேவல் சண்டை நடத்த சம்மதிக்கவில்லை. விலங்குகள் மீதான வன்கொடுமை என்பதில் விலங்கு என்ற வார்த்தையில் பறவைகள் அடங்கும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
‘விலங்கு’ சட்டப்பூர்வ வரையறையின்படி, மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினத்தையும் குறிக்கிறது என்பது தனி நீதிபதியின் முடிவு, இரு நீதிபதி அமர்வு எதிராக இருக்கும்போது, இந்த நீதிமன்றம் இரு நீதிபதிகள் அமர்வின் உத்தரவை பின்பற்ற கடமைப்பட்டுள்ளது. சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கக் கூடாது என டிஜிபியும் சுற்றறிக்கை கொடுத்துள்ளார். விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் சில விதிவிலக்கான விதிகள் உள்ளன. இந்தச் சட்டத்தில் உள்ள எதுவும் எந்தவொரு சமூக மற்றும் மதத்தின் தேவைக்காக எந்த விலங்கையும் கொல்வதை குற்றமாக்காது என பிரிவு 28 கூறுகிறது. பிரிவு 17 அறிவியல் நோக்கங்களுக்காக குறைந்தபட்ச துன்பத்துடன் பரிசோதனைகளை மேற்கொள்ள உதவுகிறது. கலாச்சாரத்தின் பெயரில், ஜல்லிக்கட்டு போன்ற சில நிகழ்வுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. சேவல் சண்டை பரவலாக இருப்பதாகக் கூறப்பட்டாலும், அதை மையக் கருவாகக் கொண்ட ‘ஆடுகளம்’ என்ற பிரபலமான திரைப்படம் கூட இருந்தாலும், தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்கு கலாச்சார அந்தஸ்து வழங்கப்படுமா என்ற ஐயம் எழுந்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் சேவல் சண்டை நடத்தக்கோரிய மனுவில் அங்கு கலாச்சார ரீதியாக உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. எனவே, 2017ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் செய்யப்பட்ட சட்ட திருத்தத்தைப் போல
ஒரு சட்ட திருத்தத்தை சேவல் சண்டை நடத்துவதற்கு அரசு இயற்றினால், சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கலாம். எனவே, மனுதாரருக்கு எந்த சட்டப்பூர்வ உரிமையும் இல்லை. மனிதர்களால் ஏற்பாடு செய்யப்படும் விலங்கு சண்டை நிகழ்வை சட்டம் வெளிப்படையாகத் தடை செய்கிறது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.