ஆணுக்கு வழங்கப்பட்ட 9 ஆண்டு சிறைத்தண்டனை ரத்து; திருமணமான பெண் கள்ளக்காதலில் ஈடுபட்டால் பலாத்காரம் ஆகாது: பஞ்சாப் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சண்டிகர்: திருமணமான பெண், வேறு ஒருவருடன் திருமண வாக்குறுதியின் பேரில் பாலியல் உறவு வைத்துக்கொள்வது பலாத்காரம் ஆகாது என பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. பஞ்சாப்பில் திருமணமான பெண்ணுக்கு திருமண ஆசை காட்டி பாலியல் உறவில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில், ஒருவருக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை ரத்து செய்து பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் தற்போது முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஷாலினி சிங் நாக்பால், இதுதொடர்பான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
அவர் தனது தீர்ப்பில், ‘சட்டப்பூர்வமாக திருமணம் ஆன ஒரு பெண்ணை, திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் உறவுக்கு உடன்பட வைப்பது என்பது கற்பனைக்கு எட்டாதது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண், தனது கணவர், மாமனார், மாமியார் மற்றும் குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்தபடியே, குற்றம்சாட்டப்பட்ட நபருடன் ஓராண்டுக்கும் மேலாக பாலியல் உறவில் இருந்துள்ளார். இது முற்றிலும் இருவரின் சம்மதத்துடன் நடந்த செயலாகும். எனவே, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 90ன்படி, தவறான புரிதலின் அடிப்படையில் இந்த உறவு ஏற்படவில்லை.
இது ஒழுக்கக்கேடான, தார்மீகமற்ற செயல் மட்டுமே. திருமண பந்தத்தின் புனிதத்தை அவமதிக்கும் இந்த செயலுக்கு சமூகக் களங்கம் மற்றும் சிவில் ரீதியான விளைவுகள் இருக்குமே தவிர, இதுபோன்ற சம்பவங்கள் பலாத்கார என்ற குற்றச் செயலாகாது. சட்டப்பூர்வமாக திருமணமான மற்றும் 18 வயது பூர்த்தியடைந்த ஒரு பெண், தனது திருமண உறவுக்கு வெளியே மற்றொருவருடன் திருமண வாக்குறுதியின் அடிப்படையில் பாலியல் உறவில் ஈடுபடுவதை, திருமண பந்தத்தை அவமதிக்கும் பொறுப்பற்ற செயலாக மட்டுமே கருத முடியும்’ என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
கள்ளக்காதல் வழக்கில் கேரள ஐகோர்ட் அதிரடி
திருமண ஆசை காட்டி ஏமாற்றி பாலியல் உறவு கொண்டதாக தொடரப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிரான நடவடிக்கைகளை ரத்து செய்து கேரள உயர் நீதிமன்றம் இந்த முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.கிரிஷ் தனது தீர்ப்பில், ‘திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்த ஒரு வழக்கை நிரூபிக்க, அந்த பாலியல் உறவு தொடங்கியபோதே அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் ஆணுக்கு இல்லை என்பதையும், அவரை பாலியல் ரீதியாக சுரண்டும் நோக்கத்துடன் மட்டுமே அந்த வாக்குறுதி அளிக்கப்பட்டது என்பதையும் அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க வேண்டும். இந்த வழக்கில் இருவருக்கும் இடையேயான உறவு, பரஸ்பர உணர்வுப்பூர்வமான ஈடுபாட்டின் அடிப்படையில் சம்மதத்துடன் நிகழ்ந்துள்ளது. மோசடியான வாக்குறுதியின் அடிப்படையில் இருவருக்கும் இடையிலான உறவு ஏற்படவில்லை. எனவே, பலாத்காரம், ஏமாற்றி சேர்ந்து வாழ்தல், மோசடி திருமணம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரங்கள் இல்லை. எனவே அந்த நபர் மீதான அனைத்து குற்றவியல் நடவடிக்கைகளையும் ரத்து செய்கிறேன்’ என்று உத்தரவிட்டார்.