ஜெகதீப் தன்கர் ராஜினாமா விவகாரத்தில் அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; எதிரியும் இல்லை!: திரைமறைவில் நடந்த சதுரங்க ஆட்டத்தின் பரபரப்பு தகவல்
அவரது செயல்பாடுகள் காரணமாக, சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தன. ஆனால், காலத்தின் சுழற்சியில், அதே எதிர்க்கட்சிகள் இன்று அவரது ராஜினாமா குறித்து ஒன்றிய அரசுக்குக் கேள்வி எழுப்பும் விசித்திரமான சூழல் உருவாகியுள்ளது. இந்த அரசியல் திருப்பங்களின் மையப்புள்ளியாக, உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான ஊழல் குற்றச்சாட்டு அமைந்துள்ளது.
நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், நீதித்துறையில் ஊழலுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசு விரும்பியது. இதற்காக, நீதிபதியைப் பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை மக்களவையில் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு தயாரானது. ஆளும் கட்சி மட்டுமல்லாமல், எதிர்க்கட்சி எம்பிக்களின் ஆதரவையும் பெற்று, இந்த விஷயத்தில் தானே தலைமையெடுத்து கொண்டு செல்ல வேண்டும் என ஒன்றிய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், இந்தத் திட்டங்களை எல்லாம் தவிடுபொடியாக்கும் வகையில், மாநிலங்களவைத் தலைவரான ஜெகதீப் தன்கர், எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த இதேபோன்ற தீர்மானத்தை ஒன்றிய அரசுக்குத் தெரிவிக்காமலேயே ஏற்றுக்கொண்டு, அரசாங்கத்திற்குப் பெரும் அதிர்ச்சியளித்தார். ஜெகதீப் தன்கரின் இந்த தன்னிச்சையான முடிவு, ஒன்றிய அரசைக் கடும் அதிருப்திக்குள்ளாக்கியது. தங்கள் தலைமைத்துவத்தை நீர்த்துப்போகச் செய்யும் இந்த நடவடிக்கையை ஒன்றிய அரசு தீவிரமாகக் கருதியது.
உடனடியாக, அன்று மாலையே பிரதமர் மோடி தலைமையில் மூத்த அமைச்சர்கள் கூடி ஆலோசித்தனர். தொடர்ந்து, ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அலுவலகத்தில் கூடிய அமைச்சர்கள், பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மாநிலங்களவை எம்பிக்களை குழுக்களாக வரவழைத்தனர். அவர்களிடம், ரகசியமாகத் தயாரிக்கப்பட்டிருந்த முக்கியத் தீர்மானத்தில் கையெழுத்துப் பெறப்பட்டது. மேலும், அடுத்த சில நாட்களுக்கு எம்பிக்கள் அனைவரும் டெல்லியை விட்டுச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டனர். இந்த ரகசியத் தீர்மானத்தில் எம்பிக்கள் கையெழுத்திட்ட பிறகு, ஜெகதீப் தன்கர் எப்போதெல்லாம் ஒன்றிய அரசின் நிலைப்பாட்டிற்கு எதிராகச் செயல்பட்டார்?, வரம்புகளை மீறினார்?, அவரால் ஒன்றிய அரசுக்கு ஏற்பட்ட தர்மசங்கடங்கள் என்னென்ன? ஆகியவை குறித்து எம்பிக்களுக்கு விளக்கப்பட்டது. அதேநேரம் ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் தயாராகிக்கொண்டிருந்தது. மறுபுறம் ஒன்றிய அரசுக்கு எதிராகச் செயல்பட்டவர் என்ற பிம்பமும் கட்டமைக்கப்பட்டது. தனக்கு எதிராக ஆளுங்கட்சி கூட்டணி எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானம் குறித்த தகவல் ஜெகதீப் தன்கரின் காதுகளுக்கு எட்டியது. இது அவருக்குப் பெரும் அழுத்தத்தையும், அவமானத்தையும் ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஒன்றிய அரசு தரப்பிலிருந்து அழுத்தம் உச்சத்தை எட்டிய நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு, ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தனது ராஜினாமா கடிதத்தில், உடல்நலப் பராமரிப்புக்கு முன்னுரிமை அளிப்பதற்காக இந்த முடிவை எடுத்ததாக குறிப்பிட்டிருந்தார். அதேநேரம் பிரதமர் மோடி, ஜெகதீப் தன்கர் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்து தெரிவித்தாலும், எதிர்க்கட்சிகள் இந்த உடல்நிலை காரணத்தை ஏற்கவில்லை. ‘அன்று பிற்பகல் வரை மகிழ்ச்சியாக இருந்தவர், திடீரென எப்படி ராஜினாமா செய்தார்?’ எனக் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இந்த ராஜினாமா தன்னிச்சையானதா? அல்லது அழுத்தத்தின் விளைவா? என்ற கேள்வியை எழுப்பினார்.
இவரது கருத்து மேலும் விவாதத்தை வலுக்கச் செய்துள்ளது. ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார். இந்த விவகாரம் குறித்து ஒன்றிய அரசு தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசை நோக்கி சரமாரியாகக் கேள்வி எழுப்பி வருகின்றன. குடியரசுத் துணைத் தலைவர் போன்ற உயர் பதவியில் இருப்பவர் திடீரென விலகியதற்கான உண்மையான காரணத்தை ஒன்றிய அரசு வெளிப்படைத்தன்மையுடன் விளக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு காலத்தில் ஜெகதீப் தன்கரை எதிர்த்தவர்கள் இன்று அவருக்காகக் குரல் கொடுப்பதும், அவரைத் தேர்ந்தெடுத்த ஒன்றிய அரசே அவருக்கு எதிராகத் திரும்பியதும், இந்திய அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்ற கூற்றை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
முன் அனுமதியின்றி திடீர் சந்திப்பு;
துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர், தனது ராஜினாமா அறிவிப்பிற்கு முன்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திப்பதற்காக, முன் அனுமதி பெறாமல் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்றது அதிகாரிகளை பெரும் திகைப்பில் ஆழ்த்தியது. நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் தன்கரின் இந்த திடீர் வருகை, நெறிமுறைப்படி இயங்கும் குடியரசுத் தலைவர் செயலகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தன்கர் வந்த செய்தியை குடியரசுத் தலைவரின் உதவியாளர், ராணுவச் செயலாளரிடம் அவசரமாகத் தெரிவித்தார்.
அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்புக்குப் பிறகு, தன்கர் அரசியலமைப்பின்படி தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தார். பின்னர், இரவு 9.25 மணிக்கு தனது எக்ஸ் தளத்தில் இந்த ராஜினாமா செய்தியை அறிவித்தார். தன்கரின் ராஜினாமாவை உள்துறை அமைச்சகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனிடையே, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், நேற்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை குடியரசுத் தலைவர் மாளிகை பகிர்ந்தது. ஆனால், தன்கர் மற்றும் முர்மு இடையேயான சந்திப்பு குறித்த எந்தப் புகைப்படமும் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.