நல்லகண்ணு அய்யா அவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை: நல்லகண்ணு அய்யா அவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவக்குழுவின் பரிந்துரைப்படி அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதோடு, 48 மணி நேரத்தில் அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு மீண்டும் நல்லக்கண்ணுவுக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டதை அடுத்தும் அவருக்கு மீண்டும் செயற்கை சுவாசம் அளித்து தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மருத்துவமனைக்கு சென்று நல்லக்கண்ணு அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இந்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணுவின் உடல்நலம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரித்துள்ளார்.
நல்லகண்ணு குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்ததாவது; உடல்நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகைசால் தமிழர் தோழர் நல்லகண்ணு அய்யா அவர்களது உடல்நலன் குறித்து தோழர் முத்தரசன் அவர்களிடமும் - அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்களிடமும் தொடர்ந்து நலன் விசாரித்து வருகிறேன். நல்லகண்ணு அய்யா அவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்."இவ்வாறு தெரிவித்துள்ளார்.