ஐடி ஊழியர் கவின் ஆணவக்கொலை தேசிய பட்டியலின ஆணையம் விசாரணை
நெல்லை: கவின் ஆணவப் படுகொலை தொடர்பாக தேசிய பட்டியலின ஆணையம் நேரில் விசாரணை நடத்தியது. தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் செல்வ கணேஷ் காதல் விவகாரத்தில் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தேசிய பட்டியலின ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை கலெக்டர் சுகுமார் மற்றும் அதிகாரிகளுடன் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் ஆணையத்தின் தலைவர் கிஷோர் மக்வானா அளித்த பேட்டி: கவின் ஆணவப் படுகொலை விவகாரத்தில் போலீசார் சரியாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மரணத்தில் சுர்ஜித்தின் பெற்றோரின் பங்கு என்ன? இந்தக் கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? எனவும் முழுமையான விசாரணை நடத்த ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக முழுமையான விசாரணை நடத்திய பின்னர் ஒன்றிய அரசிடம் எங்களது அறிக்கையை தாக்கல் செய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, கவின் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு சென்று தேசிய பட்டியலின ஆணைய குழுவினர் பார்வையிட்டனர். பின்னர், கவின் செல்வகணேசின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்திற்கு நேற்று மதியம் சென்று அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது கவின் செல்வகணேசின் தந்தை சந்திரசேகர் அளித்த மனுவில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை உறுதி செய்யும் வகையில் விரிவான சட்டம் ஒன்றை உடனடியாக இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். விசாரணையின் போது தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத், எஸ்பி ஆல்பர்ட் ஜான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
* பெண் எஸ்ஐக்கு சிபிசிஐடி சம்மன்
கவின் செல்வகணேஷ் ஆணவக்கொலை விவகாரத்தில், அவரது காதலி சுபாஷினியிடம், சிபிசிஐடி போலீசார் கடந்த 2ம் தேதி சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு தலைமறைவாகவுள்ள சுர்ஜித்தின் தாயான போலீஸ் எஸ்ஐ கிருஷ்ணகுமாரியின் வீடு, அவரது நெருங்கிய உறவினர் வீடு உட்பட 3 முகவரிகளுக்கு விரைவு பதிவு தபால்கள் மூலம் சம்மன் அனுப்பியுள்ளனர். இதில் ஆக. 8ம் தேதிக்குள் எஸ்ஐ கிருஷ்ணகுமாரி நேரில் ஆஜராகி கவின் கொலை வழக்கு தொடர்பான கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.