ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான பெண்கள் யுரோ கோப்பை கால்பந்து ேபாட்டி சுவிட்சர்லாந்தில் நடக்கிறது. ஜெனீவாவில் நேற்று நடைபெற்ற முதல் காலிறுதியில் நார்வே-இத்தாலி அணிகள் மோதின. முன்னணி அணிகளுக்கு உரிய வேகத்தில் விளையாடிய இரு அணிகளும் முதல் பாதியில் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. ஆனால் 2வது பாதியில் முன் கள வீராங்கனை கிறிஸ்டினா கிரெல்லி 50, 90வது நிமிடங்களில் 2 கோல்கள் அடித்து இத்தாலி அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றார். இடையில் நார்வே வீராங்கனை அடா ஹெர்கெர்பெர்க் 66வது நிமிடத்தில் அடித்த கோல் முன்னிைலையை குறைக்க மட்டும் உதவியது. அதனால் இத்தாலி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.