இத்தாலி வெனிஸ் நகரில் நடந்த விழாவில் அஜித் குமாருக்கு ஜென்டில்மேன் டிரைவர் விருது
சென்னை: நடிகர் அஜித் குமாருக்கு ’ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் 2025’ என்ற விருது வழங்கி, எஸ்ஆர்ஓ மோட்டார் ஸ்போர்ட் குழுமம் கவுரவித்துள்ளது. இத்தாலி வெனிஸ் நகரில் நடந்த விழாவில், அஜித் குமார் தனது குடும்பத்துடன் பங்கேற்று விருதை பெற்றுக்கொண்டார். தமிழ் படவுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார் சினிமாவை தாண்டி, தீவிர கார் பந்தய வீரராக இருக்கிறார். பல்வேறு நாடுகளில் நடந்த கார் பந்தயங்களில் தனது குழுவினருடன் இணைந்து பங்கேற்று வந்த அவர், சில பரிசுகளையும் வென்றுள்ளார். ‘அஜித் குமார் ரேஸிங்’ என்ற கார் பந்தய நிறுவனத்தை அவர் நடத்தி வருகிறார். துபாய், பெல்ஜியம் உள்பட பல நாடுகளில் நடந்த கார் பந்தயங்களில் இந்த அணி பரிசுகளை வென்றுள்ளது.
இந்நிலையில், கார் பந்தய வீரர் அஜித் குமாருக்கு இந்த ஆண்டின் ஜென்டில்மேன் ஓட்டுநர் என்ற விருது வழங்கப்பட்டது. இத்தாலியில் வழங்கப்பட்ட விருது குறித்து அஜித் குமாரின் மனைவியும், நடிகையுமான ஷாலினி வெளியிட்டுள்ள பதிவில், ‘தொழில்முனைவோர், கார் ரேஸராக இருந்த பிலிப்பே சாரியோல் சார்பில் வெனிஸில் வழங்கப்படும் இந்த ஆண்டுக்கான ஜென்டில்மேன் ஓட்டுநர் விருது வென்ற எனது கணவரின் பக்கத்தில் நிற்பதற்காக பெருமைப்படுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். அஜித் குமார் அடுத்து ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தில் தன்னை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கிறார். இது அவர் நடிக்கும் 64வது படமாகும்.