வரி ஏய்ப்பு புகாரையடுத்து திருநங்கைகள் வீடுகளில் ஐடி ரெய்டு: கட்டுக்கட்டாக சிக்கிய கோடிக்கணக்கான பணம்
மும்பை: மும்பையில் வரி ஏய்ப்பு புகாரையடுத்து திருநங்கைகளின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத கோடிக்கணக்கான ரொக்கப் பணமும், தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் திருநங்கைகள் சிலர், வரி ஏய்ப்பில் ஈடுபட்டு கணக்கில் காட்டப்படாத சொத்துக்களைச் சேர்த்திருப்பதாக வருமான வரித்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று நள்ளிரவில் திருநங்கைகளின் வீடுகளில் அதிரடி சோதனையைத் தொடங்கினர். இந்த சோதனை விடிய விடிய பல மணி நேரம் நீடித்ததால், அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சோதனையின்போது, கட்டுக்கட்டாக கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகளும், தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் மொத்த மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சோதனைக்குள்ளான வீடுகளில் இருந்து முக்கிய நிதி ஆவணங்கள் மற்றும் சொத்துப் பத்திரங்களையும் அதிகாரிகள் கைப்பற்றி, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, சோதனை நடந்தபோது, ரயீசா என்ற திருநங்கை ஒருவர் தனது வீட்டில் அதிகாரிகள் புகுந்து சோதனை நடத்துவதாகக் கூறி எதிர்ப்பு தெரிவிக்கும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.