ஐடி ஊழியர் ஆணவ படுகொலை கைதான எஸ்ஐ, வாலிபருக்கு காவல் கேட்டு சிபிசிஐடி மனு
நெல்லை: தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் கவின் செல்வகணேஷ் (27) காதல் விவகாரத்தில் கடந்த 27ம்தேதி பாளை கேடிசி நகரில் காதலி சுபாஷினியின் தம்பி சுர்ஜித்தால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சுர்ஜித், அவரது தந்தை எஸ்ஐ சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தாய் எஸ்ஐ கிருஷ்ணகுமாரி நாளை (8ம்தேதி) ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் ஆரம்பக்கட்ட விசாரணை நடத்திய பாளை போலீசாரிடம் சிபிசிஐடி போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். பாளை எஸ்எஸ்ஐ முருகன், ஏட்டு வெயிலாட்சி ஆகியோரிடம், கொலை நடந்த இடம், பாளை போலீஸ் ஸ்டேஷனுக்கும், சம்பவ இடத்திற்கும் எவ்வளது தூரம்?
சம்பவம் நடந்த போது அங்கு யார், யாரெல்லாம் இருந்தார்கள்? சுர்ஜித் தப்பியது எப்படி? என சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரித்தனர். இதைத்தொடர்ந்து, கைதாகி சிறையில் உள்ள எஸ்.ஐ சரவணன் மற்றும் சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க நெல்லை தீண்டாமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுத்தாக்கல் செய்தனர்.