ITதுறையில் அமெரிக்காவை சார்ந்திருப்பது ஆபத்து: உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு எச்சரிக்கை
அமெரிக்கா: ITதுறையில் அமெரிக்காவை சார்ந்திருப்பது ஆபத்து என உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் மென்பொருள், கிளவுட் சேவைகள் மற்றும் சமூக ஊடக தளங்களை இந்தியா அதிகம் சார்ந்திருப்பது, நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். வாஷிங்டன் எப்போது வேண்டுமானாலும் இச்சேவைகளை, அதன் தரவை அணுகுவதை துண்டிக்க முடியும். இது இந்தியாவின் வங்கி, நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை ஒரே இரவில் செயலிழக்கச் செய்துவிடும். அதே நேரத்தில், வெளிநாட்டு தளங்கள் மூலம் நாட்டின் பொது விவாதத்தையும் கட்டுப்படுத்த முடியும் என்று ஜிடிஆர்ஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியா ஒரு "டிஜிட்டல் ஸ்வராஜ் மிஷன்" ஒன்றைத் தொடங்க வேண்டும் என்று ஜிடிஆர்ஐ நிறுவனர் அஜய் ஸ்ரீவாஸ்தவா பரிந்துரைத்துள்ளார். இந்தத் திட்டம், இறையாண்மை மேகம் (Sovereign Cloud), உள்நாட்டு இயக்க முறைமை (Operating System), உள்நாட்டு சைபர் பாதுகாப்பு மற்றும் தரவு சார்ந்த AI தலைமை ஆகியவற்றை மையமாகக் கொண்டிருக்க வேண்டும். ஐரோப்பா ஏற்கனவே இறையாண்மை மேகத்தை உருவாக்கி, டிஜிட்டல் சந்தைகள் சட்டத்தை (Digital Markets Act) அமல்படுத்தி வருகிறது. சீனாவும் தனது அரசு, பாதுகாப்பு மற்றும் தொழில்துறை அமைப்புகளில் உள்ள வெளிநாட்டு குறியீடுகளை உள்நாட்டு தளங்களுடன் மாற்றியுள்ளது.
இந்த நாடுகள் தங்களுடைய டிஜிட்டல் இறையாண்மையைப் பாதுகாப்பதில் முன்னெடுத்துச் செல்லும் நடவடிக்கைகளை இந்தியா பின்பற்ற வேண்டும் என்று ஸ்ரீவாஸ்தவா வலியுறுத்தினார். அமெரிக்க தொழில்நுட்ப ஜாம்பவான்களான மைக்ரோசாஃப்ட் (Windows), கூகுள் (Android) அல்லது அமேசான் (AWS) போன்ற கிளவுட் சேவைகளை நிறுத்திவிட்டால், இந்தியாவின் முழு டிஜிட்டல் முதுகெலும்பும் ஒரே இரவில் செயலிழந்துவிடும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், இந்தியா கிளவுட் சமநிலையை அடைய வேண்டும். பாதுகாப்பு மற்றும் முக்கியமான துறைகளில் வெளிநாட்டு OS ஐ முழுமையாக மாற்ற வேண்டும், மேலும் உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்த திறந்த-நெட்வொர்க் தளங்களை உருவாக்க வேண்டும். இந்த மாற்றங்கள் இந்தியாவின் தொழில்நுட்ப இறையாண்மையைப் பாதுகாக்க அவசியமானவை என்றும், நீண்டகால பொருளாதார மற்றும் பாதுகாப்பு நிலைத்தன்மைக்கு வழிவகுக்கும் என்றும் ஜிடிஆர்ஐ வலியுறுத்துகிறது.