ஐஎஸ்எஸ்எப் துப்பாக்கி சுடுதல்: 2வது தங்கம் வென்று அனுஷ்கா அசத்தல்
துக்ளதாபாத்: ஐஎஸ்எஸ்எப் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் நேற்று, 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை அனுஷ்கா தோக்குர் சிறப்பாக செயல்பட்டு தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். என்சிஆர் பிராந்தியத்தின் துக்ளதாபாத் நகரில் ஐஎஸ்எஸ்எப் துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிர் பிரிவில் நேற்று நடந்த 50 மீட்டர் ரைபிள் 3 பொசிசன் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை அனுஷ்கா தோக்குர் கலந்து கொண்டார்.
அவர் 461 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். அனஸ்டாஸியா சொரிகினா 454.9 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும், மரியா குருக்லோவா 444 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர். இப்போட்டிகளில் அனுஷ்கா தோக்குர், 2வது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். முன்னதாக, 50 மீட்டர் ரைபிள் பிரிவு போட்டியில் அவர் முதலிடம் பிடித்து தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
ஆடவர்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு போட்டியில் இந்தியாவை சேர்ந்த 16 வயது வீரர் ஜோனாதன் காவின் ஆன்டனி, 244.8 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இத்தாலியை சேர்ந்த லூகா அரைட் 236.3 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும், ஸ்பெயின் வீரர் லூகாஸ் சான்செஸ் தோமே, 215.1 புள்ளியுடன் வெண்கலமும் வென்றனர்.