உளவு பார்க்கும் இஸ்ரேல் நிறுவனம்; வாட்ஸ்அப் பயனாளர்களை பெகாசஸ் குறிவைக்க தடை: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி
வாஷிங்டன்: இஸ்ரேலின் என்எஸ்ஓ குழுமம் உளவு பார்ப்பதற்காக தனது பெகாசஸ் ஸ்பைவேர் மென்பொருளை வாட்ஸ்அப் பயனர்களின் சாதனங்களில் திருட்டுத்தனமாக இயக்க அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இஸ்ரேலின் என்எஸ்ஓ குழுமத்தின் ஸ்பைவேர் மென்பொருளான பெகாசஸ் மூலம் உலகம் முழுவதும் உள்ள முக்கிய தலைவர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பிரபல பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்களின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவிலும் எதிர்க்கட்சி தலைவர்கள், நீதிபதிகளின் செல்போன்கள் பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், பெகாசஸ் மூலம் வாட்ஸ்ப் பயனர்கள் குறிவைக்கப்படுவதாக கடந்த 2019ம் ஆண்டு மெட்டா நிறுவனம் கலிபோர்னியாவில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிலிஸ் ஹாமில்டன் பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். என்எஸ்ஓ நிறுவனத்திற்கு நிரந்தர தடை விதிக்க கோரிய மெட்டாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ’’வாட்ஸ்அப் பயனர்கள் யாரும் விரும்பாத அல்லது எதிர்பார்க்காத ஸ்பைவேர் மூலம் இஸ்ரேல் நிறுவனம் ஊடுருவியுள்ளது.
வாட்ஸ்அப்பில் 300 கோடிக்கும் அதிகமான பயனர்கள் உள்ளனர். அவர்களுக்கு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை மெட்டா உறுதி செய்கிறது. ஆனால் இந்த பாதுகாப்பு வசதியை தகர்த்து, சட்டவிரோத அணுகல் செய்ததன் மூலம் என்எஸ்ஓ குழுமம் வாட்ஸ்அப்பிற்கு ஈடு செய்ய முடியாத தீங்கை விளைவித்துள்ளது’’ என்றார்.
மேலும், வாட்ஸ்அப் பயனர்களை பெகாசஸ் குறிவைக்க நிரந்தர தடை விதித்த நீதிபதி, என்எஸ்ஓ குழுமத்திற்கு விதிக்கப்பட்டிருந்த 168 பில்லியன் இழப்பீட்டு தொகையை 4 மில்லியன் டாலராக குறைத்து உத்தரவிட்டார்.