இஸ்ரேல் கொடியை முத்தமிட வைத்து கிரெட்டா மீது கொடூரத் தாக்குதல்..? வெளியான அதிர்ச்சி வாக்குமூலம்
இஸ்தான்புல்: காசாவிற்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் போராளிகளை இஸ்ரேல் ராணுவம் சிறைப்பிடித்த நிலையில், அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதாக வெளியான தகவல் உலகை உலுக்கியுள்ளது. காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிப் பொருட்களுடன் 40க்கும் மேற்பட்ட கப்பல்களில் சென்ற ‘குளோபல் சுமுத்’ நிவாரணக் கப்பல் கூட்டணியை இஸ்ரேல் கடற்படை அண்மையில் வழிமறித்தது. அதில் பயணம் செய்த, பருவநிலை செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க் உள்ளிட்ட 450க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்திற்கு துருக்கி, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்த நிலையில், சிறைப்பிடிக்கப்பட்ட ஆர்வலர்களில் ஒரு பகுதியினர் துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு நேற்று நாடு கடத்தப்பட்டனர். இது தொடர்பாக துருக்கி பத்திரிகையாளர் எர்சின் செலிக் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘கிரெட்டா தன்பெர்க்கை இஸ்ரேல் படையினர் மிகக் கடுமையாக அவமானப்படுத்தினர். அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்று, கொடூரமாகத் தாக்கினர். மேலும், அவரைத் தரையில் மண்டியிட வைத்து இஸ்ரேல் நாட்டு கொடியை வலுக்கட்டாயமாக முத்தமிட வைத்தனர்.
இதேபோல, இத்தாலிய பத்திரிகையாளர் லொரன்சோ அகோஸ்டினோ, ‘கிரெட்டாவின் மீது இஸ்ரேல் கொடியைப் போர்த்தி, வெற்றிப் கோப்பையைப் போல அவரை ஊர்வலமாக இழுத்துச் சென்றனர். பல நாட்கள் தங்களுக்கு உணவு தராமல் பட்டினி போட்டதாகவும், கழிவறையில் இருந்த நீரைக் குடிக்கச் சொல்லி வற்புறுத்தியதாகவும் மற்ற ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்’ என்றார். இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ள இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம், இது ‘முழுக்க முழுக்கப் பொய்’ என்றும், கைதான அனைவரும் சட்டப்படி நடத்தப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது.