இஸ்ரேலுக்கு ஹமாஸ் வைத்த புதிய நிபந்தனை; கைதிகள் பரிமாற்றத்தில் நீடிக்கும் இழுபறி: போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதில் சிக்கல்
கெய்ரோ: அமைதிப் பேச்சுவார்த்தையில் தங்கள் முக்கியத் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என ஹமாஸ் நிபந்தனை விதித்துள்ளதால், போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. எகிப்தில் நடைபெற்று வரும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில், கைதிகள் பரிமாற்ற விவகாரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான இந்த பேச்சுவார்த்தையில், இஸ்ரேல் சிறைகளில் உள்ள தங்களது முக்கிய பாலஸ்தீனத் தலைவர்களான மர்வான் பர்கவுதி, அகமது சாதத், ஹசன் சலாமே மற்றும் அப்பாஸ் அல்-சையத் ஆகியோரை விடுவிக்க வேண்டும் என ஹமாஸ் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.
இவர்கள் அனைவரும் இஸ்ரேல் மீதான தாக்குதல்களுக்குத் தலைமை வகித்தவர்கள் என்பதால், அவர்களை விடுவிக்க இஸ்ரேல் தொடர்ந்து மறுத்து வருகிறது. மேலும், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 250 பாலஸ்தீனக் கைதிகள், போருக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட 1,700 காசா மக்கள் ஆகியோரையும் விடுவிக்க வேண்டும் என ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தவிர, இஸ்ரேல் படைகள் காசாவிலிருந்து முழுமையாக வெளியேறுவதற்கான தெளிவான காலக்கெடு, நிரந்தரப் போர் நிறுத்தத்திற்கான சர்வதேச உத்தரவாதம் போன்ற நிபந்தனைகளையும் ஹமாஸ் முன்வைத்துள்ளது. ஆனால், இந்த நிபந்தனைகளை ஏற்க இஸ்ரேல் தரப்பு தயாராக இல்லை. ‘தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், இந்த ஒப்பந்தத்தை உடைக்கவும் தயாராக இருப்பதாக’ ஹமாஸ் எச்சரித்துள்ளதால், பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.