இஸ்ரேல், அமெரிக்காவின் எதிர்ப்புக்கு மத்தியில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிப்பு: ஐ.நா.வில் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றம்
புதுடெல்லி: இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஐ.நா.வில் இந்தியா வாக்களித்திருப்பது உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதனால் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையிலான பிரச்னை, கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி, காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் நுழைந்து நடத்திய திடீர் தாக்குதலில் இருந்து உச்சக்கட்டத்தை எட்டியது. இந்தத் தாக்குதலில் சுமார் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டு, 250க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதற்குப் பதிலடியாக, ஹமாஸை முற்றிலுமாக அழிப்போம் எனச் சூளுரைத்த இஸ்ரேல், காசா மீது வரலாறு காணாத ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது.
தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தரைவழிப் படையெடுப்பு காரணமாக காசா பெரும் அழிவைச் சந்தித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் இதுவரை 37,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் பெண்களும் குழந்தைகளுமாவர். இஸ்ரேலின் முற்றுகையால் உணவு, நீர் மற்றும் மருந்துப் பொருட்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு, பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். காசாவில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் தேடுதல் வேட்டைகளும், யூதக் குடியேறிகளுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான மோதல்களும் அங்கு அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.
சர்வதேச அளவில் இந்தப் போர் பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேலுக்குத் தொடர்ந்து ராணுவ மற்றும் அரசியல் ஆதரவை வழங்கி வரும் நிலையில், உலக நாடுகள் பலவும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஏற்படும் அப்பாவி மக்களின் உயிரிழப்புகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து, உடனடியாகப் போர் நிறுத்தத்தைக் கோரி வருகின்றன. தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும், ஸ்பெயின், அயர்லாந்து, நார்வே போன்ற சில ஐரோப்பிய நாடுகள், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. இந்த நெருக்கடி, இரு நாடுகள் தீர்விற்கான அவசியத்தை மீண்டும் முன்னிறுத்தியுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் ‘நியூயார்க் பிரகடன’ தீர்மானம், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நேற்று கொண்டுவரப்பட்டது. ‘இரு நாடுகள் தீர்வு’ என்ற அடிப்படையில் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.
இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 142 நாடுகளும், எதிராக இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகளும் வாக்களித்தன. 12 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இந்த வாக்கெடுப்பின் மூலம், இறையாண்மையுள்ள, சுதந்திரமான பாலஸ்தீனத்திற்கு இந்தியா தனது நீண்டகால ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தீர்மானத்தின்படி, காசா போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருதல், இறையாண்மையுள்ள பாலஸ்தீன அரசை நிறுவுதல், ஹமாஸ் அமைப்பின் தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்து பிணைக்கைதிகளை விடுவிக்கக் கோருதல், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேல் தனது குடியேற்றங்களை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த ஜூன் மாதம் காசா போர்நிறுத்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்திருந்த நிலையில், தற்போது விரிவான தீர்வுத் திட்டங்களுடன் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவளித்துள்ளது. இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை சர்வதேச நாடுகள் வரவேற்றுள்ள நிலையில், இஸ்ரேலும் அமெரிக்காவும் இதனை பயனற்ற நாடகம் மற்றும் தவறான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு என கடுமையாக விமர்சித்துள்ளன. வரும் 22ம் தேதி நடைபெறவுள்ள ஐ.நா. உச்சிமாநாட்டிற்கு முன்னதாக இந்த வாக்கெடுப்பு நடந்துள்ள நிலையில், அந்த மாநாட்டில் பிரான்ஸ் உள்ளிட்ட மேலும் பல ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீனத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிகப் பெரிய சவால்;
‘நியூயார்க் பிரகடன’ தீர்மானத்திற்கு 142 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளது. இந்த வாக்கெடுப்பு மூலம் பிரான்ஸ் மற்றும் சவூதி அரேபியா தலைமையிலான அமைதி முயற்சிகளுக்கு மேலும் வலுசேர்க்கிறது. குறிப்பாக, வரும் 22ம் தேதி நடைபெறவுள்ள உச்சிமாநாட்டில் மேலும் ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க இந்த தீர்மானம் வழிவகுக்கும். மேலும் இந்த தீர்மானம் ஐ.நா. பொதுச்சபைத் தீர்மானம் என்பதால், பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தைப் போல சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தாது. இருப்பினும், இந்த தீர்மானம் தார்மீக மற்றும் அரசியல் அழுத்தத்தை உருவாக்கும். மேலும் எதிர்கால அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு உறுதியான கட்டமைப்பை உருவாக்கும். முக்கிய நாடுகளின் கடும் எதிர்ப்பு மற்றும் தொடரும் போர்ச் சூழலுக்கு மத்தியில், இந்தத் தீர்மானத்தில் உள்ள செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதே மிகப்பெரிய சவாலாகும்.