உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் மழை: திடீர் வெள்ளப்பெருக்கில் இரும்பு பாலம் சரிந்தது
உடுமலை: கடந்த 5 நாட்களுக்கு முன் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் திருமூர்த்தி மலை மீது அமைந்துள்ள பஞ்சலிங்க அருவிக்கு செல்ல உதவியாக இருந்த இரும்பு பாலம் சரிந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை மீது பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும். திருப்பூர் மாவட்டம் மட்டுமல்லாது கோவை, திண்டுக்கல், ஈரோடு, பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விடுமுறை தினங்களில் திருமூர்த்தி அணையை சுற்றிப்பார்க்க வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து செல்வது வழக்கம்.
கடந்த 5 நாட்களுக்கு முன் விடிய விடிய கொட்டி தீர்த்த கன மழையால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலாற்றின் வழியே திருமூர்த்தி அணையை அடைந்தது. வெள்ளப்பெருக்கில் கான்கிரீட் பில்லர்கள், இரும்பு தடுப்பு கம்பிகள், இரும்பு வேலிகள் அடித்து செல்லப்பட்டது. குறிப்பாக அருவிக்கு செல்லும் பாதையில் அமைந்துள்ள இரும்பு பாலத்தின் சுவர்கள் மண் அரிப்பால் படிக்கட்டுகளுடன் பாலம் சரிந்தது. சுற்றுலாப் பயணிகள் பாலத்தின் வழியாக சென்று ஆற்றை கடந்து அருவிக்கு செல்ல முடியும். இதனால் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.