இந்தியர் மீது தொடரும் இனவெறி தாக்குதல்: அயர்லாந்து அதிபர் கடும் கண்டனம்
டப்ளின்: அயர்லாந்தில் இந்திய சமூகத்தினர் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ள அந்நாட்டு அதிபர், அயர்லாந்தின் வளர்ச்சிக்கு இந்தியர்களின் பங்களிப்பு மகத்தானது என்று புகழாரம் சூட்டியுள்ளார். அயர்லாந்து நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மீது சமீப காலமாக இனவெறித் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக இந்தியர்களை குறிவைத்து மர்ம கும்பல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து டப்ளினில் உள்ள இந்தியத் தூதரகம், அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்காக அவசரப் பாதுகாப்பு அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டது. அதில், இந்தியர்களுக்கு எதிரான உடல்ரீதியான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், குடிமக்கள் பிரச்னைக்குரிய இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்தச் சூழலில் அந்நாட்டு அதிபர் மைக்கேல் டி. ஹிக்கின்ஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய சமூகத்தினர் மீது நடத்தப்படும் இந்தத் தாக்குதல்கள் இழிவானவை; அவை அயர்லாந்து நாட்டின் இறையாண்மைக்கு எதிரானவை. மருத்துவம், செவிலியப் பணி, பராமரிப்புத் துறைகள், கலாசாரம், வணிகம் மற்றும் தொழில்முனைவு எனப் பல வழிகளிலும் அயர்லாந்தின் வளர்ச்சிக்கு இந்திய சமூகம் மகத்தான பங்களிப்பு அளிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான விடுதலைப் போராட்டங்கள் உள்ளிட்ட விசயங்கள் முக்கியமானவை. இத்தகைய வன்முறைச் செயல்கள் நம்மை சிறுமைப்படுத்துகின்றன. இந்திய மக்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய அளப்பரிய நன்மைகளை மறைக்கின்றன. சமூக ஊடகங்கள் உட்பட எந்த வழியிலும் பரப்பப்படும் வெறுப்புச் செய்திகளோ அல்லது வன்முறையைத் தூண்டும் பேச்சுகளோ அயர்லாந்தின் கண்ணியத்தை பாழாக்கிவிடும். அனைத்து சமூகத்தினரும் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் பரஸ்பர மரியாதையுடன் வாழக்கூடிய இடமாக அயர்லாந்து திகழ வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தினார்.