உள்நாட்டு சுற்றுலாவிற்கு விண்ணப்பிக்கலாம் ஐஆர்சிடிசி அறிவிப்பு
சென்னை: சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த இந்தியன் ரயில்வே சுற்றுலா கழகக் குழு பொது மேலாளர் ராஜலிங்கம் கூறியதாவது: ஐ.ஆர்.சி.டி.சி உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவை மற்றும் உள்ளூர் ரயில் சுற்றுலா சேவை என மூன்று வகையான சுற்றுலா சேவைகளை வழங்குகிறது. உள்நாட்டு விமான சுற்றுலா எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரிக்கப்பட்டுள்ளது. கயாவிற்கு சிறப்பு சுற்றுலா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவற்றினை ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை நாட்களில் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். தென்னிந்திய உணவுகளும் வழங்கப்பட உள்ளன.
தமிழ்நாடு பகுதியில் ஊட்டி, கொடைக்கானல், மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், மூணாறு - தேக்கடி போன்ற இடங்களுக்கு 2,500 ரயில் பயணிகள் சுற்றுலா செல்லும் வகையில் ஐ.ஆர்.சி.டி.சி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நவகிரகம் சபரிமலை போன்ற ஆன்மீக தலங்களுக்கு சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியாரை விட குறைவாக சாதாரண கட்டணங்கள் தான் இந்த பயணத்திற்கு வசூலிக்கப்படுகிறது. இரண்டு நாட்கள் முதல் அதிகபட்சமாக 10 நாட்கள் வரை தங்கும் இடம், உணவு ,போக்குவரத்து என ஒருங்கிணைந்த பேக்கேஜ் அமைப்பில் அழைத்து செல்லப்படும். இந்த சுற்றுலாவிற்கு செல்ல விரும்புபவர்கள் www.irctctourism.com இணைய தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.