ஐஆர்சிடிசி ஊழல் வழக்கு லாலு, ரப்ரி தேவி, தேஜஸ்வி மீது கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு
புதுடெல்லி: ஐஆர்சிடிசி ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை டெல்லி நீதிமன்றம் பதிவு செய்துள்ளது. ஆர்ஜேடி கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004 முதல் 2009 வரை ரயில்வே அமைச்சராக இருந்தார்.அப்போது ஐஆர்சிடியின் கீழ் புரி, ராஞ்சியில் செயல்படும் ஓட்டல்களை ஒப்பந்த அடிப்படையில் நடத்துவதற்கு, தனியாருக்கு விட்டதில் ஊழல்கள் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த 2017ம் ஆண்டு லாலு மீது சிபிஐ வழக்கு பதிந்தது.
ஓட்டல்களின் பராமரிப்பு ஒப்பந்தங்களை தனியார் நிறுவனத்துக்கு வழங்கியதற்காக லாலு யாதவ் ஒரு பினாமி நிறுவனம் மூலம் 3 ஏக்கர் நிலத்தை பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் லாலு யாதவின் வழக்கறிஞர், குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று வாதிட்டார். இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ்,அவரது மனைவி ரப்ரி தேவி, லாலுவின் மகனும் பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி மீது டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், லாலு, ரப்ரி, தேஜஸ்வி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினர். அவர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை இந்த மாத கடைசியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் 6 மற்றும் 11 ம் தேதிகளில் பீகாரில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் லாலு மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஆர்ஜேடி கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என தெரிகிறது.