இன்ஸ்டாகிராமில் பழகி பெண்ணை ஏமாற்றியதாக எழுந்த புகார்; சார்ஜ் மெமோவை எதிர்த்து ஐபிஎஸ் அதிகாரி வழக்கு: தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு
சென்னை: ஐபிஎஸ் அதிகாரி பி. செல்வ நாகரத்தினம் 2019ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் பழகி திருமணம் செய்துகொள்வதாக கூறி உடல் ரீதியான உறவில் இருந்ததாகவும், பின்னர் முறையாக பேசாதது குறித்து கேட்ட போது, துப்பாக்கியால் சுட்டு விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் டிஜிபிக்கு புகாரளித்திருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், செல்வநாகரத்தினம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூறி அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் டிஜிபி சார்பில், நாக செல்வ ரத்தினத்திற்கு மெமோ அனுப்பப்பட்டு, 30 நாட்களில் விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து நாக செல்வரத்தினம் சார்பில் சென்னையில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த தீர்ப்பாயம், செல்வநாகரத்தினத்திற்கு வழங்கபட்ட மெமோவை ரத்து செய்தது. மேலும், புதிதாக மெமோ வழங்கலாம் எனவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி அனுப்பப்பட்ட புதிய மெமோவை எதிர்த்து செல்வநாகரத்தினம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில்குமார் அமர்வு, இந்த வழக்கில் அக்டோபர் 8ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று உத்தரவிட்டனர். அப்போது, தற்போதைய நிலையே நீடிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று செல்வ நாகரத்தினம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.பிரகாஷ் கோரினார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இறுதி விசாரணையில் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.