ஐ.பி.எஸ் அதிகாரி தற்கொலை விவகாரம்; கட்டாய விடுப்பில் போலீஸ் டிஜிபி அனுப்பி வைப்பு: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்த ராகுல்
சண்டிகர்: ஐ.பி.எஸ். அதிகாரி தற்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அரியானா டி.ஜி.பி. சத்ருஜீத் கபூர், கடும் நெருக்கடி காரணமாகக் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். அரியானாவைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான ஒய். பூரன் குமார், கடந்த 7ம் தேதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதி வைத்ததாகக் கூறப்படும் 8 பக்க கடிதத்தில், மாநில டி.ஜி.பி. சத்ருஜீத் கபூர், முன்னாள் ரோதக் எஸ்.பி. நரேந்திர பிஜார்னியா உள்ளிட்ட 8 உயரதிகாரிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
‘ஜாதி ரீதியான பாகுபாடு, மன உளைச்சல் மற்றும் அவமானப்படுத்துதல் போன்ற தொடர் துன்புறுத்தல்களே’ தனது கணவரின் தற்கொலைக்குக் காரணம் என பூரன் குமாரின் மனைவியும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான அம்னீத் பி. குமார் குற்றம்சாட்டினார். மேலும், குற்றம்சாட்டப்பட்ட டி.ஜி.பி. கபூர் மற்றும் பிஜார்னியாவை உடனடியாகப் பதவியில் இருந்து நீக்கிக் கைது செய்யும் வரை, பிரேத பரிசோதனை செய்யவோ, உடலைத் தகனம் செய்யவோ அனுமதிக்க மாட்டோம் என அவரது குடும்பத்தினர் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பூரன் குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், தலித் அமைப்புகளும் அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், குடும்பத்தினர் மற்றும் எதிர்க்கட்சிகளின் தொடர் அழுத்தத்தைத் தொடர்ந்து, அரியானா டி.ஜி.பி. சத்ருஜீத் கபூர் தற்போது விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். முன்னதாக, மற்றொரு முக்கிய அதிகாரியான நரேந்திர பிஜார்னியாவும் விடுப்பில் அனுப்பப்பட்டிருந்தார். இந்த வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்கொலைக் கடிதத்தின் வரைவு பூரன் குமாரின் லேப்டாப்பில் இருந்ததாகக் கூறப்படுவதால், அதனைத் தடயவியல் ஆய்வுக்காக ஒப்படைக்குமாறு புலனாய்வாளர்கள் அவரது குடும்பத்தினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணைக்கு அரசு உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்திருந்தாலும், டி.ஜி.பி.யின் விடுப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ உத்தரவு உடனடியாக வெளியிடப்படவில்லை.