ஐபிஎல் மினி ஏலம் அபுதாபியில் நடக்கும்
புதுடெல்லி: ஐபிஎல் 2026க்கான மினி ஏலம், அபுதாபியில் வரும் டிசம்பர் 3வது வாரம் நடைபெற உள்ளது. கடந்த இரு ஐபிஎல் ஏலங்கள் சவுதி அரேபியாவின் ஜெட்டா மற்றும் துபாயில் நடந்தன. அதன் தொடர்ச்சியாக வரும் 2026ம் ஆண்டு ஐபிஎல்லுக்கான மினி ஏலத்தையும் இந்தியாவுக்கு வெளியே அபுதாபியில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த ஏலம், டிசம்பர் 15-16 தேதிகளில் நடைபெறும் எனத் தெரிகிறது. ஐபிஎல்லில் மோதும் 10 அணிகள், தாம் நிறுத்தி வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை வரும் 15ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மகளிர் பிரிமியர் லீக் ஏலம், டெல்லியில் நவம்பர் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அணிகள், ஏற்கனவே, தாங்கள் வைத்துக்கொள்ள விரும்பும் வீராங்கனைகளின் பட்டியலை சமர்ப்பித்து விட்டன.
சாம்சனுக்கு பதில் ஜடேஜா; விட்டுத்தர சிஎஸ்கே தயார்: சென்னை: ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக, போட்டிகளில் பங்கேற்கும் 10 அணிகள், தாங்கள் தக்க வைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட வேண்டும். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே), ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை தம் பக்கம் இழுக்க தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ஆனால், சாம்சனை விடுவிக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னணி வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, சாம் கரன் ஆகிய இருவரை ராஜஸ்தான் கேட்டு வருகிறது. அதற்கு சென்னை அணி சம்மதம் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சன் சிஎஸ்கே அணிக்கு வந்தால், ஐபிஎல் தொடரின் பாதியில் எம்.எஸ். தோனி விலகுவதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் தகவல்கள் கூறுகின்றன.