2026 ஐபிஎல்லுக்காக அதிரடி மாற்றங்கள் சிஎஸ்கே அணியில் தொடரும் தோனி? சொதப்பல் வீரர்களை கழற்றிவிட திட்டம்
சென்னை: வரும் 2026ல் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் எம்.எஸ்.தோனி மீண்டும் இடம்பெறுவார் எனக் கூறப்படுகிறது. அதே சமயத்தில் சரியாக செயல்படாத பல வீரர்களை கழற்றி விட்டு புதியவர்களை சேர்ப்பதற்கான திட்டத்தில் அந்த அணி தீவிரம் காட்டி வருகிறது. நடப்பாண்டில் நடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி, 14 போட்டிகளில் 4ல் மட்டுமே வென்று கடைசி இடத்தை பிடித்தது.
அதேபோல், ராஜஸ்தான் அணியும் 4ல் மட்டுமே வென்று கடைசி இடத்துக்கு முந்தைய, 9ம் இடத்தை பெற்றது. இதனால் இரு அணிகளிலும் வீரர்களை மாற்றுவது தொடர்பான திட்டங்கள் பேசப்பட்டு வருகின்றன. வரும் 2026ல் நடக்கும் அடுத்த சீசன் ஐபிஎல்லில் ஆடப்போவதில்லை என்பதற்கான சமிக்ஞை எதையும் தோனி இதுவரை வெளிப்படுத்தவில்லை. தவிர, மேலும் ஒரு சீசனில் தோனி ஆடினால் நல்லது என, சிஎஸ்கே நிர்வாகம் உறுதியாக நம்புகிறது. எனவே, 2026ல், சிஎஸ்கேவுக்காக தோனி ஆடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.
அதேசமயம், கடந்த முறை அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டு சரிவர செயல்படாத வீரர்களை கழற்றி விட சிஎஸ்கே திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் குறிப்பாக, சிஎஸ்கே அணியில் கடந்தாண்டு மீண்டும் சேர்க்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வினின் (ரூ.9.75 கோடி) பெயர் பலமாக அடிபடுகிறது. தவிர, டெவோன் கான்வே (ரூ. 6.25 கோடி), ரச்சின் ரவீந்திரா (ரூ.4 கோடி), ராகுல் திரிபாதி (ரூ. 3.4 கோடி), சாம் கர்ரன் (ரூ. 2.4 கோடி), குர்ஜப்நீத் சிங் ( ரூ.2.2 கோடி), நாதன் எல்லிஸ் (ரூ.2 கோடி), தீபக் ஹூடா (ரூ.1.75 கோடி), விஜய் சங்கர் (ரூ. 1.2 கோடி) ஆகியோர் கழற்றி விடப்படும் பட்டியலில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இதன் மூலமும், கையிருப்பில் உள்ள நிதியையும் சேர்த்து, ரூ. 40 கோடியுடன் அடுத்த ஏலத்தில் சிறந்த வீரர்களை வளைத்து போட சிஎஸ்கே திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ராஜஸ்தான் அணியில் இருந்து அதன் கேப்டன் சஞ்சு சாம்சன் வெளியேற உள்ளதாகவும் அவர் சிஎஸ்கே அணியில் சேர ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கேமரூன் கிரீன், மிட்செல் ஓவன், பென் ஸ்டோக்ஸ் ஆகிய வீரர்களில் ஒருவரை ஏலம் எடுப்பதில் சிஎஸ்கே ஆர்வம் காட்டும் என கூறப்படுகிறது.