ஐபிஎல்லில் இருந்து அஸ்வின் ஓய்வு
புதுடெல்லி: தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் ஆல் ரவுண்டராக விளங்கி பல்வேறு சாதனைகளை படைத்தவர் அஸ்வின் (38). டெஸ்ட் போட்டிகளில் 2வது அதிகபட்சமாக, 537 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அஸ்வின், கடந்தாண்டு டிசம்பரில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அஸ்வின், ஐபிஎல் போட்டிகளிலும் அதிகளவில் ஆடி வந்தார். கடந்த 2009ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்ந்த அஸ்வின், 221 ஐபிஎல் போட்டிகளில் ஆடி, ஆப் ஸ்பின் மூலம் 187 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவரது எகானமி ரேட், 7.20. சென்னை தவிர, ரைசிங் புனே சூப்பர் ஜையன்ட், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்காவும் அவர் ஆடியுள்ளார்.
கடந்தாண்டு நடந்த ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய அஸ்வின், 9 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் நேற்று அறிவித்தார். இது தொடர்பாக சமூக வலைதளம் ஒன்றில் அவர் வெளியிட்ட பதிவில், ‘நான் பங்கேற்ற ஐபிஎல் அணிகளுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஐபிஎல் போட்டிகளில் இருந்து நான் ஓய்வு பெறுகிறேன். இது ஒரு சிறப்பான நாள். அதேபோல், சிறப்பானதொரு துவக்கம். ஒவ்வொரு முடிவுக்கும் புதிய துவக்கம் இருக்கும் என்பார்கள். ஐபிஎல்லில் எனது நாள் முடிவுக்கு வந்தாலும், கிரிக்கெட் தொடர்பான வேறு பிற லீக்குகளில் பயணிப்பது குறித்து யோசிப்பேன்’ எனக் கூறியுள்ளார்.