20 ஆண்டுகளைக் கடந்தும் முடிவில்லாத விசாரணை; சிபிஐயிடம் 7,072 ஊழல் வழக்குகள் தேக்கம்: ஒன்றிய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அதிர்ச்சி தகவல்
புதுடெல்லி: மத்திய புலனாய்வுத் துறையின் ஆயிரக்கணக்கான ஊழல் வழக்குகள் பல ஆண்டுகளாக, சில வழக்குகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றங்களில் தேங்கிக் கிடப்பதாக ஒன்றிய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ஒன்றிய, மாநில அரசு அமைப்புகளில் நடைபெறும் ஊழல்களைக் கண்காணிப்பதும், ஊழல் தடுப்புச் சட்டம் 1988-இன் கீழ் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரிக்கும் வழக்குகளை மேற்பார்வையிடுவதும் ஒன்றிய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) முக்கியப் பணியாகும். இந்த ஆணையம் வெளியிடும் ஆண்டு அறிக்கைகள், நாட்டின் ஊழல் வழக்குகளின் நிலவரத்தைக் குறித்த முக்கியத் தரவுகளை வெளிப்படுத்தும். அந்த வகையில், சிபிஐயின் செயல்பாடுகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விரிவான ஆய்வை ஆணையம் தனது சமீபத்திய அறிக்கையில் வழங்கியுள்ளது. அதன்படி கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, சிபிஐ விசாரித்த 7,072 ஊழல் வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் விசாரணைக்காக நிலுவையில் உள்ளன. இவற்றில் 379 வழக்குகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாகவும், 2,281 வழக்குகள் 10 முதல் 20 ஆண்டுகளாகவும், 2,115 வழக்குகள் 5 முதல் 10 ஆண்டுகளாகவும் தேங்கிக் கிடக்கின்றன.
பத்தாண்டுகளுக்கும் மேலாக 2,660 வழக்குகள் நிலுவையில் இருப்பது மிகுந்த கவலைக்குரிய விசயம் என்று ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. வழக்கு விசாரணைகள் மட்டுமல்லாமல், சிபிஐ மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களால் தாக்கல் செய்யப்பட்ட 13,100 மேல்முறையீடுகள் மற்றும் சீராய்வு மனுக்கள் உயர் நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளன. இவற்றுள் 606 மனுக்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாகவும், 1,227 மனுக்கள் 15 முதல் 20 ஆண்டுகளாகவும் முடிவடையாமல் இருப்பது நீதி வழங்கும் முறையில் உள்ள பெரும் தாமதத்தைச் சுட்டிக்காட்டுகிறது. கடந்த 2024ம் ஆண்டில் மட்டும் 644 வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் 392 வழக்குகளில் தண்டனையும், 154 வழக்குகளில் விடுதலையும் கிடைத்துள்ளன. கடந்த ஆண்டில் தண்டனை விகிதம் 69.14 விழுக்காடாக இருந்துள்ளது. இது 2023ம் ஆண்டில் 71.47 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், 2024ம் ஆண்டில் 807 புதிய ஊழல் வழக்குகள் சிபிஐயால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிபிஐயிடம் 2024ம் ஆண்டு இறுதியில், 529 ஊழல் வழக்குகள் புலன்விசாரணைக்காக நிலுவையில் இருந்தன. இவற்றில் 56 வழக்குகள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் புலன்விசாரணையில் உள்ளன. பொதுவாக ஒரு வழக்கைப் பதிவு செய்த ஓராண்டுக்குள் புலன்விசாரணையை முடித்து, தேவைப்பட்டால் உரிய அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய வேண்டும் என சிபிஐக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அதீத பணிச்சுமை, போதிய ஆட்பற்றாக்குறை, வழக்குத் தொடர உரிய அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் பெறுவதில் ஏற்படும் தாமதம், பொருளாதாரம் மற்றும் வங்கி மோசடி வழக்குகளில் அதிக அளவிலான ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டிய தேவை, தொலைதூரங்களில் உள்ள சாட்சிகளைக் கண்டறிந்து விசாரிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் போன்ற காரணங்களால் புலன்விசாரணையை முடிப்பதில் தாமதம் ஏற்படுவதாக ஒன்றிய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.