ஆய்வு செய்யாமல் பொதுநல வழக்கா? பெட்ரோல் பங்க்குக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ளதாக பெட்ரோல் பங்க்குக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய பொதுநல வழக்கை ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கோலப்பஞ்சேரியில் உயர் அழுத்த மின் கம்பிகளுக்கு கீழ் பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டுள்ளதாகவும், விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்க் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரகுபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு நடத்திய ஆய்வுகளில், மனுதாரர் கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை என்று தெரியவந்துள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,‘மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு சில புகைப்படங்களை தவிர, எந்த ஆதாரங்களும் இல்லை. புகைப்படங்களை ஆதாரங்களாக கருத முடியாது. முறையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் பொதுநல மனுக்களை தாக்கல் செய்யக் கூடாது என்று அவ்வப்போது எச்சரித்தும் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது, எந்த அடிப்படையும் இல்லாமல் எதிர்மனுதாரர்களை துன்புறுத்தும் நோக்கிலும், நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையிலும், இந்த வழக்கு உள்ளது. எனவே, இந்த வழக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. அபராதத்தொகையை மனுதாரர் புதுச்சேரி சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு ஒரு மாதத்தில் செலுத்த வேண்டும்,’ என்று உத்தரவிட்டனர்.