விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைப்பது மனித உரிமை மீறல் ஆகாது: ஐகோர்ட் கருத்து
சென்னை: விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைப்பது மனித உரிமை மீறல் ஆகாது என ஐகோர்ட் கருத்துதெரிவித்துள்ளது. வேணுகோபாலிடம், மாமனார் சொத்தை அடமானம் வைத்து விஜயகிருஷ்ணன் ரூ.6 லட்சம் கடன் பெற்றிருந்தார். அடமானமாக வைத்த பத்திரங்களை வேணுகோபால் திருடி விட்டதாக விஜயகிருஷ்ணன் போலீசில் புகார் அளித்தார். பத்திரத்தை விஜயகிருஷ்ணனிடம் திருப்பிதர ஆய்வாளர் ரவி மிரட்டியதாக வேணுகோபால் புகார் அளித்தார். ஆய்வாளர் ரவி, எஸ்.ஐ. ஷஜிபாவுக்கு எதிராக வேணுகோபால் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். மனுவை விசாரித்த ஆணையம், ஆய்வாளர், எஸ்.ஐ.க்கு தலா ரூ.10,000 அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
ஆணைய உத்தரவை எதிர்த்து ஆய்வாளர் ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது; விசாரணையில் வேணுகோபால் துன்புறுத்தப்பட்டார் என்பதற்கு ஆதாரம் இல்லை என தெரிவித்த நீதிபதிகள்; விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைப்பது மனித உரிமை மீறல் ஆகாது என கூறிய நீதிபதிகள்; மனித உரிமை மீறல் வழக்கில் புளியந்தோப்பு காவல் ஆய்வாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்தனர். மேலும் காவல் ஆய்வாளருக்கு ரூ.10,000 அபராதம் விதித்த உத்தரவையும் ரத்து செய்து உத்தரவிட்டனர்.