விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு முன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை மனு: மதுரை ஆதீனம் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
இந்த வழக்கில் மதுரை ஆதீனத்திற்கு முன்ஜாமீன் வழங்கிய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், வயதை சுட்டிகாட்டி விசாரணை அதிகாரி நேரில் சென்று விசாரணை செய்துகொள்ள அறிவுறுத்தி இருந்தது. இதையடுத்து, விசாரணை அதிகாரி கடந்த 20ம் தேதி காலை 11.30 மணியளவில் மதுரை ஆதின மடத்திற்கு நேரில் வந்து விசாரணையை தொடங்கினார். ஆனால், ஆதீனம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், ஆதீனத்திற்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், ஆதினத்திடம் விசாரனை செய்யும் போது ஆதின ஆதரவாளர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருந்தனர். ஆதினத்திடம் விசாரணை அதிகாரி விசாரணை செய்யும் பொழுது விசாரணைக்கு ஆதினமும் ஒத்துழைக்கவில்லை. எனவே, அவருக்கு வழங்கிய முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரனைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், மதுரை ஆதீனம் விசாரணைக் ஒத்துழைக்க மறுப்பதால் முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்துள்ளோம் என்றார். மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனு குறித்து மதுரை ஆதீனம் 30ம் தேதிக்குள் பதில் தருமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.