இனுங்கூர் கிராமத்தில் 17ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு
*அறிய தகவல்கள் கிடைத்தன
கரூர் : கரூர் மாவட்டம் இனுங்கூரில்17ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள இனுங்கூர் காசி விஸ்வநாதர் கோயிலில் தொன்மையான கல்வெட்டுகள் உள்ளது என இளங்கோ என்பவர் அளித்த தகவலின்படி தொல்லியர் ஆய்வாளர் அர்ச்சுணன், உத்திராடம் ஆகிய குழுவினர் அந்த பகுதிக்கு வந்து கள ஆய்வு மேற்கொண்டனர்.
மிகவும் சிதைந்த நிலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் கருவறை, முன்மண்டபம் ஆகியவற்றின் சுவர்களிலும், முன் மண்டபத் தூண்களிலும் 17ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் காணப்பட்டன. இந்த கல்வெட்டுக்கள் குறித்து உத்தராடம் கூறியுள்ளதாவது: 1715ம் ஆண்டு கல்வெட்டில், சாலிவாகன சகாத்தம், கலியுகம், விசெய ஆகிய ஆண்டுகள் குறிக்கப்பட்டுள்ளன. இனுங்கூர் என அழைக்கப்படும் இந்த ஊர் அந்த காலத்தில் கிருஷ்ணபூபால சமுத்திரம் என அழைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
இந்த ஊரில் இருக்கும் மகாசனங்கள் ஈஸ்வரன் கோயிலில் அபிஷேகம், வைவேத்தியம், திருவிளக்கு ஆகிய வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுவதற்காக நஞ்சை புஞ்சை நிலங்கள் இந்த ஊரில் சர்வமானியமாக வழங்கப்பட்டுள்ளதை கல்வெட்டு தெரிவிக்கிறது.இந்த நிலங்களுக்கு உரிய எல்லைகளாக சில பகுதிகள் கூறப்பட்டுள்ளன.
மேலும், இந்த தானத்திற்கு தீங்கு நினைப்பவர்கள் கங்கைகரையில காராம்பசுவை கொன்ற பாவத்திற்கு போவார்கள் என இந்த கல்வெட்டின் இறுதியில் மல்லப்ப நாயக்கர் சோமிதம்மாள், குமாரன் குட்டு கிருஷ்ணப்பனாயக்கர், ராமம்மாள் தர்மம் என்றும் எழுதப்பட்டுள்ளது. முன்ண்டபத் தூணில் மல்லப்ப நாயக்கர், சோமிதம்மாள் ஆகியோர் உருவங்கள் செதுக்கப்பட்டு கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன என்றார்.