அன்புமணியை நீக்க பாமக நிறுவனர் ராமதாசுக்கு அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு வழக்கறிஞர் கே.பாலு பேட்டி
சென்னை: அன்புமணியை நீக்க பாமக நிறுவனர் ராமதாசுக்கு அதிகாரம் இல்லை என அன்புமணி தரப்பு வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார். கட்சி விரோத நடவடிக்கை உள்பட 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி பதில் அளிக்க வழங்கிய அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. தன் மீதான 16 குற்றச்சாட்டுகளுக்கு இருமுறை அவகாசம் அளித்தும் அன்புமணி பதில் அளிக்காததால் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக்கொண்டதாக கருதப்படும். அன்புமணி மீதான அனைத்து குற்றச்சாட்டுகள் உண்மையானது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாமக தொடங்கியதில் இருந்து இதுவரை எவரும் செய்யாத கட்சி விரோத நடவடிக்கையில் அன்புமணி ஈடுபட்டுள்ளார். அரசியல்வாதி என்பதற்கு தகுதியற்றவர் அன்புமணி. ஆகவே பாமக செயல்தலைவர் உட்பட அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணி நீக்கம் செய்கிறோம். அன்புமணியுடன் பாமகவைச் சேர்ந்த யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது. அன்புமணியுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் பாமகவினரும் கட்சியில் இருந்து நீக்கப்படுவர். அன்புமணி தனது தலைமையில் தனி அணி செயல்படுவதுபோல் செயல்பட்டுள்ளார் என தெரிவித்து அன்புமணியை கட்சியிலிருந்து நீக்கி பாமக நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டிருந்தார். பாமகவில் இருந்து அன்புமணி நீக்கப்பட்ட நிலையில் அவரது ஆதரவாளர் பாலு பேட்டி அளித்தார். அதில்,
அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் இல்லை: கே.பாலு
அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் இல்லை. அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தது கட்சி விதிகளுக்கு எதிரானது.
கட்சி நிர்வாக பணிகளை ராமதாஸ் மேற்கொள்ள முடியாது
பாமக விதிகளின்படி கட்சி நிர்வாக பணிகளை நிறுவனர் மேற்கொள்ள முடியாது. பாமக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மட்டுமே நிர்வாக பணிகளை மேற்கொள்ள முடியும்.
ராமதாஸ் அறிவிப்பு செல்லாது - கே.பாலு
ராமதாஸ் அறிவிப்பு பாமகவை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தாது. ஆகஸ்ட் .9ல் மாமல்லபுரத்தில் நடந்த பாமக பொதுக்குழுவில் பாமக தலைவர் அன்புமணியின் பதவியை நீட்டித்து தீர்மானம் போடப்பட்டது. பொதுக்குழு முடிவுகள் இந்திய தேர்தல் ஆணையத்தில் முறைப்படி தெரிவிக்கப்பட்டது.
கட்சி விதிப்படி நிறுவனர் நிர்வாக பணி மேற்கொள்ள முடியாது
பாமக விதிகளின்படி கட்சி நிர்வாக பணிகளை மேற்கொள்ளும் அதிகாரம் நிறுவனருக்கு இல்லை.
அன்புமணிக்கே தேர்தல் ஆணையம் அங்கீகாரம்
அன்புமணியின் தலைவர் பதவிக்காலத்தை 2026 ஆகஸ்ட் வரை நீட்டிப்பதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. பாமக சார்பில் ராமதாஸ் எந்த செய்தியையும் வெளியிட வேண்டாம். கட்சியின் விதிகள்படிதான் கட்சியை நடத்த முடியும்.
அன்புமணிக்கு உளவு பார்க்கும் பழக்கம் இல்லை - கே.பாலு
அன்புமணிக்கு உளவு பார்க்கும் பழக்கம் என்பதே கிடையாது. அன்புமணி உளவு பார்த்ததாக கூறுவது தவறு.
பாமக குழப்பங்களுக்கு முடிவு வந்துவிட்டது
இதுவரை பாமகவில் நிலவிய குழப்பத்துக்கு முடிவு கிடைத்துவிட்டது. தேர்தல் நேரத்தில் முடிவுஎடுக்கும் அதிகாரம் அன்புமணிக்கே உள்ளது என்றும்தெரிவித்தார்.