மண்டபம் ரயில் நிலையத்தில் வெளிமாநில ரயில்களும் நின்று செல்ல வேண்டும்
*முன்பதிவு வசதி அமைக்கப்படுமா?
மண்டபம் : மண்டபம் ரயில் நிலையத்தில் திருப்பதி, ஓகா போன்ற வெளியூர்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு செல்லும் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும். அதுபோல பயணிகள் முன்பதிவு பயணச்சீட்டு மையம் அமைக்கவும், ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.நாட்டின் பல மாநிலங்கள் மற்றும் திருச்சி, மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு மண்டபம் வழியாக ரயில்கள் இயக்கப்படுகிறது.
தினசரி மற்றும் வாராந்திர ரயிலாக அயோத்யா கேன்ட், சென்னை எழும்பூர், திருப்பதிகோயம்புத்தூர், கன்னியாகுமரி, ஹூப்பள்ளி, சென்னை எழும்பூர், மதுரை, திருச்சி, மதுரை ஒகா, பெரோஸ்பூர், மதுரை, புவனேஸ்வர், பனாரஸ், தாம்பரம், விழுப்புரம் உள்பட 14க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன.
இதில் சில ரயில்கள் மட்டும் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தி பயணிகளை இறக்கவும், ஏற்றியும் செல்கின்றன. மற்ற ரயில்கள் நிற்பதில்லை. இதனால் பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்ல பேருந்து மூலம் மதுரை, திருச்சி போன்ற ரயில் நிலையங்கள் சென்று அங்கிருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லுகின்றனர். ஆதலால் மண்டபம் ரயில் நிலையத்தை கடந்து செல்லும் அனைத்து ரயில்களும் நிற்பதற்கும், பொதுமக்களுக்கு வசதியை ஏற்படுத்திடவும், ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மண்டபம் அருகேயுள்ள மறைக்காயர் பட்டிணம் வேதாளை சாத்தக்கோன்வலசை உள்பட இந்த பகுதிகளில் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அதுபோக மண்டபம் பகுதியில் மத்திய நிறுவனங்களாக இயங்கி வரும் இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கடற்படை, மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம், கடல்சார் ஆராய்ச்சி நிலையங்கள் உள்பட ஏராளமான மத்திய அரசு நிறுவனங்கள் உள்ளது. இந்த நிறுவனங்களில் கேரளா, ஆந்திரா, குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
அதுபோல இந்த மண்டபம் மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த குழந்தைகள் கோயம்புத்தூர், திருச்சி, சென்னை, கேரளா போன்ற மாநிலங்களில் பல்வேறு கல்லூரி படிப்புகள் படித்து வருகின்றனர்.இவர்கள் வெளியூர் ரயிலில் செல்லவேண்டும் என்றால், மண்டபம் ரயில் நிலையத்திற்கு வந்து தான் ரயில்களில் செல்ல வேண்டும்.
இந்நிலையில் மண்டபம் ரயில் நிலையத்தில் சென்னை, திருச்சி,மதுரை செல்லும் ரயில்கள் மட்டும் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்லுகின்றன. வெளி மாநிலத்திற்கு செல்லும் ரயில்கள் மண்டபம் ரயில் நிலையத்தில் நிற்பதில்லை.
இதனால் வெளி மாநிலங்களுக்கு செல்வோர், மதுரை, திருச்சி போன்ற ரயில் நிலையங்களுக்கு சென்று மாற்று ரயில்களில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. நேரத்துக்கு தகுந்தவாறு ரயில்களுக்கு செல்ல முடியாததால், பேருந்துகளிலும், தனி வாகனங்களிலும் சென்று அவதிப்பட்டு செல்லுகின்றனர். ஆதலால் மண்டபம் ரயில் நிலையத்தை விரிவுபடுத்தி, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
வெளியூர்களிலிருந்து ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து 1914ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த ரயில்கள் நீராவி இன்ஜினில் தொடங்கி, எரிபொருள் எஞ்சினாக மாற்றப்பட்டு அதன் பின்னர் தற்போது எலக்ட்ரிக் மூலம் இயங்கும் ரயில்கள் இயக்குவதற்கு ரயில்வே நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனால் ராமேஸ்வரத்திற்கு வெளிமாநிலங்களில் இருந்து கூடுதலாக ரயில்கள் இயக்குவதற்கும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆதலால் ராமேஸ்வரம் செல்லும் அனைத்து ரயில்களையும், மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தி செல்வதற்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திட ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரயில் நிலைய நுழைவு பகுதி மாற்றப்படுமா?
மண்டபம் ரயில் நிலையத்தின் நுழைவு பகுதிக்கு, மண்டபம் நகர் பகுதிக்குள் சென்று ரயில் நிலையம் செல்ல வேண்டும். இதனால் சில நேரங்களில் ரயில்கள் வரும்போது நகர் பகுதியில் சாலையில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே கேட்டு மூடப்படுகிறது. ரயில் நிலையம் செல்லும் பகுதியில் கடலோரப் பகுதி இருப்பதால் சில நேரங்களில் மீன்களை ஏற்றுவதற்கு வருகை தரும் வாகனங்களும் அதிகமாக வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
மேலும் மண்டபம் பகுதி பொதுமக்கள் ரயில்வே நிர்வாகத்துக்கு நீண்ட நாளாக ஒரு கோரிக்கை வைத்து வருகின்றனர். அதன் பேரில் ராமேஸ்வரம்-ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையின் அருகே ரயில் நிலையம் அமைந்திருப்பதால் ரயில் நிலையத்தின் நுழைவுப் பகுதியை இந்த தேசிய நெடுஞ்சாலையின் பகுதியில் மாற்றி அமைக்க வேண்டும்.
இதனால் வெளியூர்களில் இருந்து மண்டபம் ரயில் நிலையத்துக்கு வருகை தரும் வாகனங்கள் மற்றும் ரயில்களில் மீன்களை ஏற்றிச் செல்ல வரும் வாகனங்கள் மண்டபம் நகர் பகுதியில் செல்லாமல் நேரடியாக தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ரயில்வே நிலையத்திற்கு சென்று விடலாம். இதனால் மண்டபம் பொதுமக்களுக்கும் எந்த இடையூறும் ஏற்படாது. ஆதலால் மண்டபம் ரயில் நிலையத்தின் நுழைவு பகுதியை மாற்றுவதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடிப்படை வசதி வேண்டும்
மண்டபம் ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் அமைக்க அனுமதி வழங்கவில்லை. இதனால் பயணிகள் சென்னை திருப்பதி, கன்னியாகுமாரி உள்பட வெளியூர்களுக்கு இரவு நேரங்களில் ரயிலில் பயணிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் முன்பதிவு பயணம் சீட்டு பெற 15 கிலோ மீட்டர் தொலை தூரத்தில் உள்ள ராமேஸ்வரம் மற்றும் 35 கி.மீ. தூரத்தில் உள்ள ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையத்திற்கு செல்லும் நிலை உள்ளது.
இதனால் பயண நேரம், அலைச்சல், வாகன செலவீனம் என பொதுமக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். அதுபோல தக்கல் பயண சீட்டு பெற முடியாமலும், மண்டபம் பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக சிரமப்பட்்டு வருகின்றனர். ஆதலால் மண்டபம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க ரயில்வே நிர்வாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.