வளர்ச்சி திட்டங்களுக்கு முதலீடுகளை ஈர்க்க கடல்சார் சர்வதேச உச்சி மாநாடு: மும்பையில் அக்.27 முதல் 31ம் தேதி வரை நடக்கிறது
சென்னை: நீர்வழி போக்குவரத்து துறைகளில் ரூ.10 லட்சம் கோடி வரை முதலீடுகளை ஈர்க்க கடல்சார் சர்வதேச உச்சி மாநாடு மும்பையில் வரும் அக்டோபர் 27 முதல் 31 வரை 5 நாள்கள் நடைபெற உள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சக செயலர் டி.கே.ராமச்சந்திரன் தெரிவித்தார். இதுகுறித்து அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி போக்குவரத்து துறைகளில் 2047ம் ஆண்டில் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு முதலீடுகளை ஈட்டும் வகையில் ‘இந்திய கடல்சார் வாரம் 2025 என்ற பெயரில் சர்வதேச கடல் சார் உச்சி மாநாடு வரும் அக். 27ம் தேதி மும்பையில் தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது. கடல்சார் துறையில் முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் தளமாக இது அமையும்.
இதில் இந்தியா உள்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள், பார்வையாளர்கள் என சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். பொதுமக்கள், தனியார் பங்களிப்பு திட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட திருத்தங்கள், தடையாக இருக்கும் சிக்கல்களை களைவது குறித்தும், பசுமை துறைமுகங்களை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன.இதன்மூலம் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, உள் நாட்டு நீர்வழி போக்குவரத்து துறைகளில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதற்காக சுமார் ரூ.10 லட்சம் கோடி வரை முதலீடுகள் ஈட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மும்பைக்கு அருகில் ஜவஹர்லால் துறைமுகம், மகாராஷ்டிர மாநில அரசு ஆகியவை கூட்டாக இணைந்து ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மும்பைக்கு அருகே பல்ஹார் மாவட்டத்தின் வதவன் என்ற இடத்தில் அதிநவீன ஆழ்கடல் துறைமுகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஒன்றிய அரசு பொதுத்துறை நிறுவனமான இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தில் 23 புதிய கப்பல்களையும், 3 சரக்கு பெட்டக கப்பல்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி துறையினரின் வசதிக்காக ‘பாரத் கண்டெய்னர் ஷிப்பிங் லைன்’ என்ற புதிய சரக்கு பெட்டக கப்பல் போக்குவரத்து நிறுவனத்தை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடல்சார் உச்சி மாநாடு ஒரு மைல் கல்லாக அமையும் என்றார். சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களின் தலைவர் சுனில் பாலிவால், மேலாண்மை இயக்குநர் ஜே.பி.ஐரீன் சிந்தியா, தூத்துக்குடி வஉசி துறைமுக தலைவர் சுசாந்த குமார் புரோஹித், இந்திய துறைமுகங்கள் சங்க மேலாண்மை இயக்குநர் விகாஸ் நர்வால், சென்னை துறைமுக ஆணைய துணை தலைவர் விஸ்வநாதன், முதன்மை செயலாளர் டி.என்.வெங்கடேஷ், ஐஏஎஸ் அதிகாரிகள் ஆர்.லட்சுமணன், விகாஸ் நர்வால், வாரிய உறுப்பினர் தேவ்கி நந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.