சர்வதேச ஜூனியர் பேட்மின்டன்: இந்திய வீராங்கனை தீக்சா அரையிறுதிக்கு முன்னேற்றம்
புனே: இந்தியா ஜூனியர் சர்வதேச கிராண்ட் பிரிக்ஸ் பேட்மின்டன் போட்டியில், தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி, இந்திய வீராங்கனை தீக்சா சுதாகர் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், புனேவில், இந்தியா ஜூனியர் சர்வதேச கிராண்ட் பிரிக்ஸ் பேட்மின்டன் போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை தீக்சா சுதாகர், தாய்லாந்தை சேர்ந்த, 9ம் நிலை வீராங்கனை பிம்சனோக் சுத்திவிரியகுல் மோதினர். முதல் செட்டில் அபாரமாக ஆடிய தீக்சா, 21-11 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்றார்.
அடுத்த செட்டில் சுதாரித்து ஆடிய பிம்சனோக், 21-19 என்ற புள்ளிக் கணக்கில் போராடி கைப்பற்றினார். அதைத் தொடர்ந்து, வெற்றியை தீர்மானிக்கும் வகையில் நடந்த 3வது செட்டில் துடிப்புடன் அபாரமாக ஆடிய தீக்சா, 21-9 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி கண்டார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வென்ற அவர் அரை இறுதிக்கு முன்னேறினார். கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த போர்னில் ஆகாஷ் சாங்மாய்/ ஜெனித் அப்பிகயில் இணை, சக இந்திய இணையான, பவ்யா சாப்ரா/ஏஞ்சல் புனேரா இணையை, 23-21, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரை இறுதிக்குள் நுழைந்தது.